ஸ்டெர்லைட் ஆலை மாசு அகற்ற குழு தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
ஸ்டெர்லைட் ஆலை மாசு அகற்ற குழு தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஜூன் 11, 2025 11:16 PM
சென்னை:'தமிழக அரசின் உத்தரவை அடுத்து, துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, 2018ல் மூடப்பட்டது. அபாயகரமான கழிவுகள், ஆலை வளாகத்தில் தேங்கியுள்ளன. இதனால், நிலம், நீர் பாதிக்கப்பட்டு உள்ளது.
எனவே, ஆலையை இடிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, துாத்துக்குடியை சேர்ந்த சமூக ஆர்வலர் பாத்திமா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, அறிக்கை தாக்கல் செய்தார்.
ஆலோசனை
அதில், 'ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள மாசை அகற்ற, நீரி எனும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், டெரி எனும் எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவனம், இ.ஆர்.எம் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஸ்ட்ராட்ஸ் என்விரான்மென்ட் பிரைவேட் லிமிடெட் ஆகிய நான்கு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன' என கூறப்பட்டிருந்தது.
இதில், 'நீரி நிறுவனம், ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆலோசனைகள் வழங்கி உள்ளது' எனக் கூறி, மனுதாரர் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதிகள், 'ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள மாசை அகற்றும் பணிகளை, எந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கலாம் என்பது குறித்து முடிவு செய்ய, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் தலைமையில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய மூத்த விஞ்ஞானி, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர், மும்பை ஐ.ஐ.டி., நிபுணர் ஆகியோர் அடங்கிய குழுவை, தமிழக அரசு இரண்டு வாரங்களில் அமைக்க வேண்டும்.
அறிக்கை
'மூன்று நிறுவனங்கள், தங்கள் அறிக்கைகளை இந்த குழுவுக்கு அளிக்க வேண்டும்.
'இந்த அறிக்கைகளை ஆய்வு செய்து, இந்த குழு, ஸ்டெர்லைட் ஆலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான நிறுவனத்தை, தேர்வு செய்ய வேண்டும்' எனக் கூறி, வழக்கின் விசாரணையை ஆக.,13ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.