தனி நபர்கள் நிலப்பிரச்னையில் தாசில்தார் தலையிடக்கூடாது ஐகோர்ட் கண்டிப்பு
தனி நபர்கள் நிலப்பிரச்னையில் தாசில்தார் தலையிடக்கூடாது ஐகோர்ட் கண்டிப்பு
ADDED : ஆக 02, 2025 07:41 PM
சென்னை:'இரு தரப்புக்கு இடையேயான நிலப் பிரச்னையில், தாசில்தார் பேச்சு நடத்துவது சட்ட விரோதமானது' என, சென்னை உயர் நீதி மன்றம் எச்சரித்துள்ளது.
சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்த கோரிக்காடு மக்கள் சார்பில், பழனிவேல் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், 'கோரிக்காடு பகுதியில் உள்ள, 0.64 ஏக்கர் நிலத்தை கேட்டு, கடந்தாண்டு டிசம்பரில் சேலம் மாவட்ட கலெக்டருக்கு மனு கொடுத்தோம்.
'எங்கள் மனுவை பரிசீலிக்கும்படி, மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்' என்று, கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் கோரும் நிலம் வேறு ஒருவரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த நிலத்தின் உரிமை தொடர்பாக, இரண்டு தனிநபர்களுக்கு இடையே பிரச்னையும் உள்ளது. அதில், அமைதி பேச்சு என்ற அடிப்படையில், சேலம் மேற்கு தாலுகா தாசில்தார் பேச்சு நடத்தி, நில உரிமை குறித்து சில முடிவுகளை தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில், அமைதி பேச்சில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு தாசில்தாருக்கு அதிகாரம் இல்லை.
வெளி நபர்களின் சொத்து குறித்து, தாசில்தார் இரு தரப்பினருக்கும் அறிவுரை கூறியதாக தெரிவித்துள்ளார். இது, சட்டபூர்வமான நடவடிக்கை இல்லை.
ஊரில் பிரச்னை வரக்கூடாது என நினைத்து, ஆர்வத்துடன் தாசில்தார் முடிவெடுத்தாலும், அந்த முடிவு ஏற்க கூடியதல்ல. தனி நபர்களுக்கு இடையேயான சொத்து பிரச்னையை, சிவில் நீதிமன்றத்தில் தான் தீர்த்துக் கொள்ள முடியும். தாசில்தார், இதுபோல எதிர்காலத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கூடாது.
நிலம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க, நீதிமன்றங்கள் உள்ளன. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. வருவாய் துறை செயலர், இந்த உத்தரவு குறித்து, அனைத்து அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

