காஞ்சி டி.எஸ்.பி., மீதான கைது நடவடிக்கை ரத்து ஐகோர்ட் விஜிலன்ஸ் பதிவாளர் விசாரணைக்கு உத்தரவு
காஞ்சி டி.எஸ்.பி., மீதான கைது நடவடிக்கை ரத்து ஐகோர்ட் விஜிலன்ஸ் பதிவாளர் விசாரணைக்கு உத்தரவு
ADDED : செப் 10, 2025 03:04 AM

சென்னை:காஞ்சிபுரம் டி.எஸ்.பி., சங்கர் கணேஷை கைது செய்து சிறையில் அடைக்கும்படி, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
காஞ்சிபுரம் மாவட்டம், நத்தப்பேட்டையை சேர்ந்தவர் சிவகுமார். பூசிவாக்கம் கிராமத்தில், டீ மற்றும் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.
வாக்குவாதம் இந்த கடையில் ஜூலை மாத இறுதியில், அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர், 'கேக்' வாங்கி சாப்பிட்டுள்ளார். கேக் நன்றாக இல்லை என்று கூறியதால், கடை உரிமையாளர் சிவகுமார் - முருகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, சிவகுமாரின் மருமகனான, போலீஸ்காராக பணிபுரியும் லோகேஷ்வரன் ரவி, முருகனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து, முருகனின் மனைவி பார்வதி, வாலஜாபாத் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, சிவகுமார், லோகேஷ்வரன் ரவி உட்பட நான்கு பேர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்தனர்; ஆனால், கைது செய்யவில்லை.
இச்சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரித்த, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செம்மல், 'போலீஸ்காரர் லோகேஷ்வரன் ரவி உட்பட, நான்கு பேரையும் கைது செய்யாதது ஏன்' என கேள்வி எழுப்பினர்.
மேலும், பட்டியலின மக்களுக்கு பாதகமாக செயல்படுவதாக கூறி, லோகேஷ்வரன் ரவி, அவரது குடும்பத்தினரை, பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து வெளியேறும்படி, கடந்த 4ம் தேதி உத்தரவிட்டார்.
பின், இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது, வழக்கில் லோகேஷ்வரன் ரவி மீது நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டி, டி.எஸ்.பி., சங்கர் கணேஷை கைது செய்து, வரும் 22ம் தேதி வரை சிறையில் அடைக்கும்படி நீதிபதி செம்மல் உத்தரவிட்டார்.
மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் இந்த உத்தரவுகளுக்கு எதிராக, போலீஸ்காரர் லோகேஷ்வரன் ரவி, காஞ்சிபுரம் எஸ்.பி., மற்றும் டி.எஸ்.பி., சங்கர் கணேஷ் மற்றும் வாலாஜாபாத் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள், நீதிபதி என்.சதீஷ்குமார் முன், நேற்று பிற்பகல் விசாரணைக்கு வந்தன. அரசு வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் ஆஜராகி, வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்தார்.
இதை பார்வையிட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு 10ன் கீழ், புகார் மற்றும் காவல் துறை அறிக்கையில் திருப்தி அடைந்தால் மட்டுமே, சிறப்பு நீதிமன்றம் அத்தகைய வெளியேற்ற உத்தரவை பிறப்பிக்க முடியும்.
'வாட்ஸாப்' உரையாடல் அதிலும், பட்டியலினத்தவருக்கு எதிராக சம்பவங்கள் நிகழும் போது மட்டுமே, அத்தகைய வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்க தேவை எழும் என, இந்த நீதிமன்றம் கருதுகிறது. அவ்வாறான சூழல் இல்லாத போது, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் தேவையற்றவை.
வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு, 4ன் கீழ், ஒரு அரசு ஊழியருக்கு எதிராக, எந்த ஒரு நடவடிக்கை அல்லது விசாரணையை எடுக்கும் போது, நிர்வாகத் தரப்பில் ஒப்புதல் பெற வேண்டும்.
எனவே, டி.எஸ்.பி.,யை சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவு, போலீஸ்காரர் லோகேஷ்வரன் ரவியை வெளியேற்ற பிறப்பித்த உத்தரவு ஆகிய இரண்டும் ரத்து செய்யப்படுகின்றன.
காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி, மாவட்ட எஸ்.பி.,க்கு இடையேயான, 'வாட்ஸாப்' உரையாடல்கள்; எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய வற்புறுத்தியது; லோகேஷ்வரன் ரவி மீது நடவடிக்கை எடுக்க கூறியது; டி.எஸ்.பி.,க்கு எதிராக உத்தரவு பிறப்பித்தது போன்ற விவகாரங்கள் குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்.
இதுதொடர்பாக, உயர் நீதிமன்ற விஜிலன்ஸ் பதிவாளர் விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை வரும், 23ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.