நீர்நிலைகளை அழிப்பதை அனுமதிக்க முடியாது தொழிற்பேட்டை அறிவிப்பை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்
நீர்நிலைகளை அழிப்பதை அனுமதிக்க முடியாது தொழிற்பேட்டை அறிவிப்பை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்
ADDED : அக் 04, 2024 11:11 PM
மதுரை:வளர்ச்சி என்ற பெயரில் நுாற்றுக்கணக்கான நீர்நிலைகளை அழித்துள்ளோம். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கோதயம் கிராம நீர்நிலையில், டான்சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கும் அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.
ஒட்டன்சத்திரம் அருகே வேட்டைக்காரன்வலசு பால்ராஜ், கோதயம் வாஞ்சிமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனு:
கோதயத்தில் அரளிகுத்துக்குளம் பெயரில் உள்ள நீர்நிலையை மீட்கக்கோரி, ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கலெக்டர் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கலெக்டர் நிராகரித்தார். அதை ரத்து செய்ய வேண்டும். நீர்நிலையில் தொழிற்பேட்டை அமைக்கும் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டனர்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு:
இது நீர்நிலையாக இல்லாதபோதுதொழிற்பேட்டை அமைக்கும் அரசின் கொள்கை முடிவில், நீதிமன்றம் தலையிட முடியாது.
நேரில் ஆய்வு செய்ய நியமித்த வழக்கறிஞர் கமிஷனர் சண்முகராஜா, கோதயத்தில் நீர்நிலை மற்றும் ஓடைகள் இருப்பதை உறுதி செய்து அறிக்கை சமர்ப்பித்தார்.
எங்களில் ஒருவரான நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், அக்.,1ல் கோதயத்தில் ஆய்வு செய்தார். பொதுப்பணித்துறையின் இணையதளத்தில் இப்பகுதி நீர்நிலைகளின் பட்டியலில் உள்ளது.
அதில் கோதயம், 'அரளிகுத்துக்குளம்' என்ற நீர்நிலை இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுதாரர்கள் கூறுவது ஆதாரப்பூர்வமானது. மனுவில் குறிப்பிட்டுள்ள சர்வே எண்களில் நீர்நிலை உள்ளது என முடிவு செய்கிறோம்.
'கூகுள் எர்த்' கூட கோதயத்தில் அரளிகுத்துக்குளம் இருப்பதை உறுதி செய்கிறது. கேள்வி எழுப்பியபோது ஏ.ஏ.ஜி., 'அது ஒரு நீர்நிலையாகத் தெரிகிறது' என ஒப்புக்கொண்டார்.
கலெக்டரின் பதில் மனு, ஆட்சேபனைகளை தாக்கல் செய்த விதம் குறித்து எங்களின் அதிருப்தியை தெரிவிக்கிறோம்.
உயர் பதவியில் உள்ள அதிகாரிகளின் கருத்துக்களை நீதிமன்றத்திற்கு அனுப்பும்போது, கூடுதல் அக்கறை காட்டுவது அவசியம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வளர்ச்சி என்ற பெயரில் நுாற்றுக்கணக்கான நீர்நிலைகளை அழித்துள்ளோம். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது.
நீர்நிலைகள் பயன்பாட்டில் இல்லாமல் போனாலும் அவற்றை பாதுகாத்து, மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி வருகிறது.
ஒரு நீர்நிலையை மாற்றுவதை அரசியலமைப்பு சட்ட ரீதியாக அனுமதிக்க முடியாது. நீர்நிலையை மீட்க, மனுதாரர்களில் ஒருவரான பால்ராஜ் அளித்த மனுவை நிராகரித்து கலெக்டர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
டான்சிட்கோவிற்கு சாதகமாக நீர்நிலையை மாற்றம் செய்ய, அரசு தரப்பில் வெளியிட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.