பேக்கேஜ் டெண்டரை நிறுத்த உயர் நீதிமன்றம் பரிந்துரை
பேக்கேஜ் டெண்டரை நிறுத்த உயர் நீதிமன்றம் பரிந்துரை
ADDED : ஜன 25, 2025 01:47 AM
மதுரை:'பேக்கேஜ் டெண்டர்' முறைக்கு எதிரான மனுக்களை, உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் நியாயமான, சம வாய்ப்பு வழங்க அந்த டெண்டர் முறையை விரைவில் நிறுத்த மறுபரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரைத்தது.
திருநெல்வேலி உள்ளிட்ட சில தென்மாவட்டங்களில், 'பேக்கேஜ் டெண்டர்' முறையில் ஒப்பந்ததாரர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்ய தமிழகநெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு வெளியிட்டது.
இதை ரத்து செய்து, ஒவ்வொரு பணிக்கும் தனித்தனி டெண்டர் அறிவிப்பு வெளியிட உத்தரவிடக்கோரி சிலர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.
மனுதாரர்கள் தரப்பு: 'பேக்கேஜ் சிஸ்டம் டெண்டர்' முறையில் சிறிய ஒப்பந்ததாரர்கள் பங்கேற்க முடிவதில்லை. அவர்களின் அடிப்படை உரிமையை மீறும் வகையில் உள்ளது.
அரசு தரப்பு: பேக்கேஜ் டெண்டர் முறைக்கான அரசாணையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டது. அந்த அரசாணையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. அதே அரசாணையை எதிர்த்து இங்கு மனு செய்தது ஏற்புடையதல்ல. மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதிகள்: பேக்கேஜ் டெண்டர் தொடர்பான அரசாணையை எதிர்த்து ஏற்கனவே தொடர்ந்த வழக்குகள் தோல்வியில் முடிந்தன. ஆதலால் இம்மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம்.
பேக்கேஜ் டெண்டர் முறையால் ஆரோக்கியமான போட்டி பாதிக்கிறது. பேக்கேஜ் சிஸ்டம் டெண்டரை விரைவில் நிறுத்த, மறுபரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரைக்கிறோம்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.

