முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு தள்ளிவைக்க ஐகோர்ட் மறுப்பு
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு தள்ளிவைக்க ஐகோர்ட் மறுப்பு
ADDED : அக் 11, 2025 01:23 AM
சென்னை:'முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வை தள்ளி வைக்கும்படி உத்தரவிட முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
தமிழகத்தில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, வரும், 12ம் தேதி போட்டி தேர்வு நடத்தப்படும் என, கடந்த ஜூலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.
ஆனால், தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் பலர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள், நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தன.
அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் நீலகண்டன் ஆஜராகி, ''தேர்வுக்கு விண்ணப்பித்த, 2.36 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு நுழைவுச்சீட்டு தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
''ஓ.எம்.ஆர்., விடைத்தாள்களும் தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. தற்போதைய நிலையில் தேர்வை தள்ளி வைத்தால், அது விண்ணப்பதாரர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்,'' என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதி, தேர்வை தள்ளி வைக்கும்படி உத்தரவிட முடியாது எனக்கூறி, மனுக்களை தள்ளுபடி செய்தார்.