ரயில்வே இடங்களில் சுவரொட்டி ஒட்டினால் ஒரு மாதம் சிறை
ரயில்வே இடங்களில் சுவரொட்டி ஒட்டினால் ஒரு மாதம் சிறை
ADDED : அக் 11, 2025 01:23 AM
சென்னை:'ரயில்கள், ரயில் நிலையங்கள், நடைமேடைகள் என, ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் சுவரொட்டிகள் ஓட்டினால், ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்' என, தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:
ரயில் நிலைய வளாகங்கள், நடைமேடைகள், டிக்கெட் வழங்கும் இடங்கள், சுவர்கள், ரயில் பெட்டிகள் மற்றும் ரயில்களின் உட்புறம் உள்ளிட்ட இடங்களில், அங்கீகாரமற்ற சுவரொட்டிகள், 'ஸ்டிக்கர்'கள் மற்றும் விளம்பரங்கள் இடம்பெறுகின்றன.
அங்கீகாரமற்ற சுவரொட்டிகள் அல்லது அறிவிப்புகளை ஒட்டுவது, பொதுச் சொத்துக்களைச் சிதைப்பது மட்டுமல்லாமல், பயணியருக்கு இடையூறு விளைவிப்பதாகும். ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களின் ஒட்டுமொத்த துாய்மையையும், அழகையும் இது பாதிக்கிறது.
ரயில்வே சொத்துக்களை எந்த விதத்தில் சேதப்படுத்தினாலும் அல்லது சிதைத்தாலும், அது தண்டனைக்குரிய குற்றம். அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ரயில்வே அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்புப் படையினர், நிலைய ஊழியர்கள் கண்காணிப்பு பணியை மேற்கொள்வர். விதிமீறல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து, ரயில்வே சட்டத்தின் பிரிவு 166 கீழ், ஒரு மாதம் வரை சிறை தண்டனை, 1,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.