'மாஜி' அமைச்சர் மீதான வழக்கு ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு
'மாஜி' அமைச்சர் மீதான வழக்கு ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு
ADDED : ஜூலை 18, 2025 10:26 PM
சென்னை:வேட்பு மனுவில் சொத்து விபரங்கள் குறித்து தவறான தகவல் தெரிவித்ததாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதியில், 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி போட்டியிட்டார்.
அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், சொத்து விபரங்களை குறைத்து, தவறான தகவல்களை தெரிவித்ததாக, வேலுாரை சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தி என்பவர், தேர்தல் கமிஷனில் புகார் அளித்தார்.
இதையடுத்து, திருப்பத்துார் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், கே.சி.வீரமணிக்கு எதிராக தேர்தல் கமிஷன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யவும், தடை விதிக்கவும், விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வீரமணி மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கு, நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வீரமணி தரப்பில், 'நான்கு ஆண்டுகளுக்கு பின், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுஉள்ளது.
'தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின், தேர்தல் அதிகாரிகள் மாநில அரசு அதிகாரிகளாக மாறி விடுவதால், அவர்கள் வழக்கை தாக்கல் செய்ய முடியாது. வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என்று வாதிடப்பட்டது.
தேர்தல் கமிஷன் தரப்பில், '2021ம் ஆண்டு ராமமூர்த்தி என்பவர் அளித்த புகார் அடிப்படையில், வருமான வரித்துறை விசாரித்து அறிக்கை அளிக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
'வருமான வரித்துறை அளித்த அறிக்கையில், வீரமணி சொத்து விபரங்களை மறைத்துள்ளதும், போலியான, 'பான்' எண் குறிப்பிட்டு இருந்ததும் தெரியவந்தது. தேர்தல் முடிந்தாலும், தேர்தல் அதிகாரி பதவி பறிக்கப்பட்டு விடாது' என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து, கே.சி.வீரமணியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி வேலுமணி, ''இவ்வழக்கில் பின்னர் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும்,'' என அறிவித்தார்.