பிரேமானந்தா சொத்துக்களை பறிமுதல் செய்ய நோட்டீஸ் ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு
பிரேமானந்தா சொத்துக்களை பறிமுதல் செய்ய நோட்டீஸ் ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு
ADDED : டிச 10, 2024 10:27 PM
சென்னை:பிரேமானந்தா அறக்கட்டளை சொத்துக்களை பறிமுதல் செய்ய வகை செய்யும் சட்டத்தின் கீழ், மத்திய வருவாய்த் துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இலங்கையில் ஆசிரமம் நடத்தி வந்த பிரேமானந்தா, 1983ல் தமிழகத்துக்கு அகதியாக வந்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆசிரமம் அமைத்தார். பாலியல் மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.
ஆவணங்கள் பறிமுதல்
இந்த வழக்கில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆசிரமத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
பிரேமானந்தா அளித்த வாக்குமூலத்தில், நிரந்தர வைப்பீடாக, 76 லட்சம் ரூபாய் வைத்துள்ளதாகவும், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் வெளிநாட்டு பணம் வைத்திருந்ததாகவும் கூறியிருந்தார்.
அவருக்கு எதிராக அன்னிய செலாவணி மோசடி வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், எழும்பூர் நீதிமன்றம் அவருக்கு தண்டனை விதித்தது.
இந்நிலையில், கடத்தல் மற்றும் அன்னிய செலாவணி மோசடியாளர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வகை செய்யும், 'சபேமா' சட்டத்தின் கீழ், 2005ல் மத்திய வருவாய் துறை, 'நோட்டீஸ்' அனுப்பியது.
இதை எதிர்த்து அறக்கட்டளை சார்பில், 2007ல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மனுவில், 'பிரேமானந்தா அறக்கட்டளைக்கு நன்கொடையாளர்கள் பலர் நன்கொடை வழங்கி உள்ளனர்.
பிரேமானந்தா அறங்காவலராக இல்லை. அறக்கட்டளை சொத்துக்களில், பிரேமானந்தாவுக்கு எந்த உரிமையும் இல்லை. நிர்வாக வசதிக்காக, சில சொத்துக்கள் பிரேமானந்தா பெயரில் வாங்கப்பட்டு உள்ளன. ஆனால், அவர் உரிமையாளர் அல்ல. எனவே, சொத்துக்களை முடக்கவோ, பறிமுதல் செய்யவோ முடியாது' என்று கூறப்பட்டது.
விதிகளுக்கு புறம்பானது
நிலுவையில், 17 ஆண்டுகளாக இருந்த இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அறக்கட்டளை தரப்பில், மூத்த வழக்கறிஞர் பி.குமார் ஆஜராகி, ''தண்டனை விதிக்கப்பட்ட பிரேமானந்தா, 2011ல் கடலுார் சிறையில் இறந்தார். அறக்கட்டளைக்கு எதிரான நடவடிக்கைகள், விதிமுறைகளுக்கு புறம்பானது. உரியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை,'' என்றார்.
மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் ஆஜராகி, ''2006ல் அறக்கட்டளை தரப்பில் நேரில் ஆஜராகி, ஆட்சேபனை தெரிவித்தனர்; விசாரணையில் பங்கேற்றனர். 2007ல் இந்த வழக்கை தாக்கல் செய்தனர். விதிகளை பின்பற்றி, சபேமா சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.
இரு தரப்பு வாதங்களுக்குப் பின், நோட்டீசை ரத்து செய்ய மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். நோட்டீஸ் தொடர்பான விசாரணையை சட்டரீதியாக எதிர்கொள்ளும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

