டாஸ்மாக்கில் ரெய்டு நடத்தியது சரிதான் ஐகோர்ட் தீர்ப்பு: அரசு மனு தள்ளுபடி
டாஸ்மாக்கில் ரெய்டு நடத்தியது சரிதான் ஐகோர்ட் தீர்ப்பு: அரசு மனு தள்ளுபடி
ADDED : ஏப் 24, 2025 01:50 AM
சென்னை: 'டாஸ்மாக் நிறுவனத்தின் பெண் அதிகாரிகள், ஊழியர்களை கேடயமாக பயன்படுத்தி, அமலாக்க துறை விசாரணையை தடுக்க முயற்சிப்பது துரதிருஷ்டமானது' என, ஐகோர்ட் தெரிவித்துஉள்ளது.
'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில், மார்ச் 6 முதல் 8 வரை, அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மாநில அரசின் அனுமதி பெறாமல் நடத்திய இந்த சோதனை செல்லாது என அறிவிக்க கோரி தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.
ஏற்க முடியாது
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் விசாரித்தனர். நேற்று அவர்கள் பிறப்பித்த தீர்ப்பு:
சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றம் என்பது, நாட்டு மக்களுக்கு எதிரானது. நாட்டின் நலன் கருதியே சோதனை நடத்தப்பட்டு உள்ளது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, 2017 முதல் 2024 வரை பதிவு செய்யப்பட்ட, 41 முதல் தகவல் அறிக்கைகள் அடிப்படையில் தான், அமலாக்க துறை சோதனை நடத்தியுள்ளது. அதற்கு சட்டத்தில் இடமிருக்கிறது.
எந்த வழக்குகளின் அடிப்படையில் சோதனை நடத்துகிறோம் என்பதை, டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தெரிவிக்க அவசியம் இல்லை.
அப்படி செய்தால், ஆதாரங்களை மறைக்கவும், அழிக்கவும் வாய்ப்புகள் உள்ளது. அதிகாரிகளிடம் கட்டாயப்படுத்தி, கையெழுத்து வாங்கியதாக அரசு சொல்வதை ஏற்க முடியாது.
அரசு ஊழியர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்; அது அவர்களின் கடமை. டாஸ்மாக் அதிகாரிகள் யாரும், இதுகுறித்து புகார் சொல்லவில்லை. அதிகாரிகள் துன்புறுத்தப்பட்டதாக, அரசு தான் சொல்கிறது. சோதனை சட்டப்பூர்வமாக நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள், அமலாக்க துறையால் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
அஸ்திவாரம் பாதிக்கும்
உரிமைகள் பாதிக்கப்பட்டிருந்தால், அதிகாரிகள் வழக்கு தாக்கல் செய்யலாம். அரசும், டாஸ்மாக் நிர்வாகமும், இந்த வழக்கை ஏன் தாக்கல் செய்தன என்று புரியவில்லை.
டாஸ்மாக் நிறுவன பெண் அதிகாரிகள், ஊழியர்களை கேடயமாக பயன்படுத்தி, அமலாக்க துறை விசாரணையை தடுக்க அரசே முயற்சிப்பது துரதிருஷ்டமானது.
டாஸ்மாக் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. அதுகுறித்து, முழு விசாரணை நடத்த வேண்டும். ஆரம்ப கட்ட நடவடிக்கையான சோதனையை எதிர்ப்பது, நீதி பரிபாலனத்தின் அஸ்திவாரத்தை பாதிக்கும்.
சோதனைக்கு அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்பதை ஏற்க முடியாது. கூட்டாட்சி தத்துவம், இந்த வழக்குக்கு பொருந்தாது. தேசத்திற்கு எதிரான குற்றம் குறித்த விசாரணையை தடுக்க, அந்த தத்துவத்தை பயன்படுத்த கூடாது.
அபத்தமான வாதம்
அரசுக்கு சொந்தமான நிறுவனத்தில் சோதனை நடத்த, அரசிடமே அனுமதி பெற வேண்டும் என்பது அபத்தமான வாதம். இது, குற்றவியல் நீதி அமைப்பின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிரானது.
எனவே, தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் தாக்கல் செய்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. அமலாக்க துறை தொடர்ந்து விசாரணை நடத்தலாம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். செந்தில் பாலாஜிக்காக வழக்கு தொடர்ந்த தமிழக அரசுக்கு இது முக்கியமான பின்னடைவு என, சட்ட நிபுணர்கள் கூறினர்.

