வங்கி கடனுடன் வர்த்தகம் அடிப்படை உரிமை இல்லை உயர்நீதிமன்றம் உத்தரவு
வங்கி கடனுடன் வர்த்தகம் அடிப்படை உரிமை இல்லை உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : மே 08, 2025 12:30 AM
மதுரை:வர்த்தகம் அல்லது தொழிலை தொடர அடிப்படை உரிமை இருந்தாலும், வங்கி கடனுடன் வர்த்தகம் மேற்கொள்வதற்கான அடிப்படை உரிமை இருப்பதாக ஒருவர் கூற முடியாது. கடன் கோரிய மனுவை வங்கி நிராகரித்ததற்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வடகாடு மாரிமுத்து தாக்கல் செய்த மனு:பிரதமரின் நுண்(மைக்ரோ) உணவு பதப்படுத்தும் தொழில் முனைவோரை உருவாக்கும் (பி.எம்.எப்.எம்.இ.,) திட்டத்தின் கீழ் சுய தொழிலில் ஈடுபடுவோருக்கு பிராண்டிங் மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீதம் நிதி மானியம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் சுய தொழில் துவங்க மாவட்ட தொழில் மையம், ஒட்டன்சத்திரத்திலுள்ள தேசியமய வங்கியில் ரூ.15 லட்சத்து 51 ஆயிரத்து 700 கடன் கோரி விண்ணப்பித்தேன்.
நுண் உணவு பதப்படுத்தும் பிரிவு மலைப்பகுதியில் நிறுவப்படவுள்ளது. அதன் மூலம் போதிய வருவாய் ஈட்ட முடியாது. திட்ட அறிக்கையின்படி அது பொருளாதார ரீதியாக சாத்தியமற்றது எனக்கூறி வங்கி நிர்வாகம் நிராகரித்தது. அதை ரத்து செய்து மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி வி.லட்சுமிநாராயணன்: நிராகரித்த உத்தரவு இந்திய அரசியலமைப்பு வழங்கிய தொழில் செய்யும் உரிமையை மீறுவதாக மனுதாரர் தரப்பு தெரிவித்தது. அதை நான் ஏற்கவில்லை. மனுதாரர் எந்தவொரு வர்த்தகம் அல்லது தொழிலை மேற்கொள்வதை யாரும் தடுக்கவில்லை. நிராகரிப்பு உத்தரவு மூலம் மனுதாரர் தொழில் துவங்குவதை தடுக்கவில்லை.
கடன் வழங்க விரும்பவில்லை என வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. வர்த்தகம் அல்லது தொழிலை தொடர அடிப்படை உரிமை இருந்தாலும், வங்கி கடனுடன் வர்த்தகம் மேற்கொள்வதற்கான அடிப்படை உரிமை இருப்பதாக ஒருவர் கூற முடியாது.
கடன் விண்ணப்பங்களை பகுப்பாய்வு செய்வதில் வங்கிகளுக்கு நிபுணத்துவம் உண்டு. அதன் முடிவுகள் மீது உத்தரவு பிறப்பிக்க இந்நீதிமன்றத்திற்கு போதிய நிபுணத்துவம் இல்லை. இம்மனு ஏற்புடையதல்ல. தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.

