கள்ளச்சாராய வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றம் 'சி.பி.சி.ஐ.டி.,யால் திறமையாக விசாரிக்க முடியாது' என ஐகோர்ட் கருத்து
கள்ளச்சாராய வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றம் 'சி.பி.சி.ஐ.டி.,யால் திறமையாக விசாரிக்க முடியாது' என ஐகோர்ட் கருத்து
ADDED : நவ 21, 2024 01:13 AM
சென்னை, நவ. 21-
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, 67 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விரைந்து விசாரித்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்யவும், சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டு உள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து, 67 பேர் பலியாகினர். கடந்த ஜூன் 19ல் இச்சம்பவம் நடந்தது.
கலெக்டர், கூடுதல் டி.ஜி.பி., -- எஸ்.பி., ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி எஸ்.பி., - டி.எஸ்.பி., உள்ளிட்ட 9 போலீஸ் அதிகாரிகள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஆணையத்தை, தமிழக அரசு நியமித்தது.
கள்ளச்சாராய மரணச் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை கோரி, அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு செயலர் இன்பதுரை, பா.ம.க., செய்தி தொடர்பாளர் கே.பாலு, பா.ஜ., வழக்கறிஞர் மோகன்தாஸ், தே.மு.தி.க., முன்னாள் எம்.எல்.ஏ., பார்த்தசாரதி, முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் ஸ்ரீதரன் ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
தண்டனை
இம்மனுக்கள், நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் வி.ராகவாச்சாரி, என்.எல்.ராஜா, வழக்கறிஞர்கள் யானை ராஜேந்திரன், ஜி.எஸ்.மணி, எஸ்.ஜனார்த்தனன் ஆஜராகினர்.
இரு தரப்பிலும், கடந்த செப்டம்பர் 19ல் வழக்கறிஞர்களின் வாதங்கள் முடிந்த நிலையில், தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது; நேற்று, நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். நீதிபதிகள் தனித்தனியாக உத்தரவு பிறப்பித்தனர்.
நீதிபதி கிருஷ்ணகுமார்:
கள்ளச்சாராய மரண சம்பவத்துக்கு முக்கிய பின்னணியாக உள்ளவர் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ்; இதற்கு முன்பும், பல வழக்குகளில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகாவில் உள்ளவர்களுடன், இதற்கான பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.
கள்ளக்குறிச்சி சம்பவம், முதல் தடவையாக நடந்தது அல்ல; கடந்த ஆண்டில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 17 பேர், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் ஐந்து பேர், கள்ளச்சாராயத்துக்கு பலியாகினர்.
இந்தப் பொதுநல மனுக்கள், விசாரணைக்கு ஏற்புடையதல்ல என்ற அரசின் வாதத்தை ஏற்க முடியாது.
பலியானவர்களில் பெரும்பாலோர் ஆதிதிராவிடர், பழங்குடியினர் என்பதற்காக, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பிரயோகிக்க முடியாது. ஏனென்றால், பலியானவர்களில் எவரையும் துன்புறுத்தலுக்கு, அவமரியாதைக்கு உட்படுத்தவில்லை.
கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியதற்காக, எஸ்.பி., உள்ளிட்ட ஒன்பது போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ததாக, அரசு தரப்பு கூறியுள்ளது.
அதேநேரத்தில், எஸ்.பி.,யின் சஸ்பெண்ட் உத்தரவை மட்டும் ரத்து செய்து, தாம்பரம் துணை ஆணையராக நியமித்துள்ளது. அதற்கு, அந்த அதிகாரி தரப்பில் மனு அளித்ததாகவும், சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய டி.ஜி.பி., பரிந்துரைத்ததாகவும், காரணம் கூறப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களை பார்க்கும்போது, சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ததற்கான காரணம் ஏற்கும்படியாக இல்லை.
வாக்குமூலம்
முக்கியம் அல்லாத பதவியில் அவரை நியமித்தாலும், துறையில் உள்ள மற்றவர்களிடம் செல்வாக்கை செலுத்த முயற்சிக்கக் கூடும் என்பதை ஒதுக்கி விட முடியாது. தவறு செய்த போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக, ஒழுங்கு நடவடிக்கையும் துவங்கவில்லை.
இதை எல்லாம் பார்க்கும் போது, சி.பி.சி.ஐ.டி.,யால் நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை நடக்காது என, இந்த நீதிமன்றம் கருதுகிறது.
கடந்த 2009 முதல் 2023 வரை, 17 வழக்குகளில் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். அவற்றில், 9 வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளார்.
எந்த இடையூறும் இன்றி, தெருக்களில் கள்ளச்சாராயத்தை விற்று வந்துள்ளார். இதில் இருந்து, போலீஸ் அதிகாரிகளுடன் அவருக்கு தொடர்பு உள்ளது என்ற மனுதாரர்களின் நிலைப்பாடு நம்பும்படியாக உள்ளது.
அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் இருந்து, கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை மாவட்டங்களில், கள்ளச்சாராய விற்பனை வழக்குகள் அதிகம் பதிவாகி உள்ளது தெரிகிறது. மாநிலங்களுக்கு இடையே பரிவர்த்தனையும் நடந்து உள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த பாலாஜி என்பவர், செங்குன்றம் பகுதியில் இருந்து மெத்தனால் வாங்குவது வழக்கம் என, வாக்குமூலம் அளித்துள்ளார்.
புதுச்சேரி, கள்ளக்குறிச்சியின் எல்லைப் பகுதியாக இருப்பதால், தமிழகத்துக்கும், புதுச்சேரிக்கும் இடையில் கள்ளச்சாராய போக்குவரத்துக்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
இந்த விஷயங்களை அவ்வளவு எளிதில் ஒதுக்கி விட முடியாது. போலீஸ் அதிகாரிகள் இந்தப் பிரச்னையை முளையிலேயே கிள்ளி எறிந்திருந்தால், 67 பேர் உயிரிழப்பை தவிர்த்திருக்க முடியும்.
சில வழக்குகளில், மூலப்பொருள் கொள்முதலில், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரியைச் சேர்ந்தவர்களின் தொடர்பு இருப்பதாக, அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சஸ்பெண்ட்
ஒட்டுமொத்தமான இந்த சட்டவிரோத செயலில், தமிழகத்தில் மட்டுமின்றி, மற்ற இரண்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ளவர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிகிறது. அதனால், சி.பி.சி.ஐ.டி.,யால் எப்படி திறமையாக விசாரிக்க முடியும் என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது.
கள்ளச்சாராயம் குடித்ததால் மட்டுமே, இந்த மரணம் நிகழவில்லை என கலெக்டர் பேட்டி அளித்துள்ளார். அதே நாளில், கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியதற்காக, எஸ்.பி., உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். அரசின் முரண்பாடான நிலையை இது வெளிப்படுத்துகிறது.
மரக்காணம் கள்ளச்சாராய மரண சம்பவத்துக்குப் பின், மெத்தனால் வினியோகம் தொடர்பாக தெளிவான வழிமுறைகள் இல்லை என, உள்துறை முதன்மை செயலருக்கு, டி.ஜி.பி., கடந்த டிசம்பரில் கடிதம் எழுதி உள்ளார்.
அதிகாரிகள், போலீசார், அரசியல்வாதிகளுக்கு எதிராக, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பதால், தனக்கு ஆர்வம் உள்ள ஒரு வழக்கில், அவரே முடிவு செய்பவராகவும் இருக்க முடியாது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்பு கூட, ஒரு வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற முடியும்.
கள்ளச்சாராய விற்பனையை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக, போலீஸ் தரப்பில் கூறினாலும், கடந்த ஆண்டில் செங்கல்பட்டு, விழுப்புரத்திலும், இந்த ஆண்டில் கள்ளக்குறிச்சியிலும் நடந்த சம்பவங்கள் வேறு விதமாக உள்ளன.
டி.ஜி.பி.,யின் கடிதத்தின்படி அரசு செயல்பட்டிருந்தால், 67 அப்பாவி உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும்.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில்குமார், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்ததை, சபாநாயகர் அனுமதிக்காததால், அரசின் கவனத்துக்கு வரவில்லை என்ற வாதம் ஏற்கத்தக்கது அல்ல. சி.பி.ஐ.,க்கு விசாரணையை மாற்றக் கூடாது என்ற அட்வகேட் ஜெனரலின் நிலைப்பாட்டை ஏற்க முடியாது.
தொடர்பு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவம், அரிதான வழக்கு என்பதால், பாரபட்சமற்ற, நியாயமான விசாரணை தேவைப்படுகிறது. இந்த வழக்கு ஆவணங்களை, சி.பி.ஐ., வசம் இரண்டு வாரங்களில் ஒப்படைக்கும்படி, கள்ளக்குறிச்சி எஸ்.பி.,க்கு உத்தரவிடப்படுகிறது.
வழக்கை விசாரித்து, விரைவில் இறுதி அறிக்கையை, சி.பி.ஐ., தாக்கல் செய்ய வேண்டும். புலன்விசாரணைக்கு, மாநில போலீசார் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
நீதிபதி பி.பி.பாலாஜி: இந்த வழக்கில் நீதிபதி கிருஷ்ணகுமார் அளித்த தீர்ப்பில், நான் முழுமையாக உடன்படுகிறேன். கூடுதலாக, என் தரப்பில் சில காரணங்களை தெரிவிக்கிறேன். குடி குடியைக் கெடுக்கும் என்பதற்கு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் ஒரு உதாரணம்.
போலீஸ் நிலையத்தில் இருந்து கல் எறியும் துாரத்தில் தான், இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது எப்படி போலீசாரால் கவனிக்க முடியாமல் போயிற்று?
உயர் போலீஸ் அதிகாரிகள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட போது, ஒருவருக்கு எதிரான உத்தரவு மட்டும் எந்த காரணமும் இன்றி ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதிகாரிகளுக்கு எதிராக எந்தவிதமான ஒழுங்கு நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது என்பதை, அரசு தரப்பால் விளக்க முடியவில்லை.
இதை எல்லாம் பார்க்கும்போது, தயாரிப்பாளர், விற்பனையாளர், போலீஸ் அதிகாரிகள் மத்தியில் தொடர்பு இருப்பதை காட்டுகிறது. அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை, எங்களால் பாராட்ட முடியவில்லை. அவர்களின் செயலற்ற தன்மையை காட்டுகிறது.
மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகளை அணுகுவதில், சி.பி.ஐ.,க்கு தகுதி உள்ளது. இந்தச் சம்பவம், சமூகத்துக்கு விடப்பட்ட எச்சரிக்கை மணி. மதுவில் இருந்து எதிர்கால தலைமுறையினரை காப்பதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.