கவர்னர் கொடுக்கும் உரிமை தொகை குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் உயர் நீதிமன்றம் கருத்து
கவர்னர் கொடுக்கும் உரிமை தொகை குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் உயர் நீதிமன்றம் கருத்து
ADDED : செப் 03, 2025 12:52 AM
சென்னை:'கவர்னர் அலுவலகத்தின், ஊடக மற்றும் தகவல் தொடர்பு ஆலோ சகருக்கான மானியத்தை திரும்ப வசூலிப்பது குறித்து, தமிழக அரசு தான் முடிவெடுக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழக கவர்னர் அலுவலகத்தில், ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு ஆலோசகராக, 2022ல் நியமிக்கப்பட்ட திருஞானசம்பந்தம் என்பவருக்கு, கவர்னரின் விருப்புரிமை மானியத்தில் இருந்து, 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இதை திரும்ப வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, சென்னை வடபழனியைச் சேர்ந்த காண்டீபன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'கவர்னரின் விருப்புரிமை மானியத்தை அறப்பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என, நிதி குறித்த விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கவுரவ அடிப் படையில் நியமிக்கப்பட்ட திருஞானசம்பந்தத்திற்கு, 10 லட்சம் ரூபாய் வழங்கியது சட்டவிரோதம்' என, மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், 'அரசு நிதியை தணிக்கை செய்வது, அரசின் கணக்காயர் பணி என்பதால், எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. மனுதாரர் கோரிக்கை குறித்து, தமிழக அரசின் கணக்காயர் தான் முடிவெடுக்க வேண்டும்' எனக்கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.