கோயில் விழா அழைப்பிதழில் ஜாதி பெயர் தவிர்க்கும் சுற்றறிக்கைக்கு எதிராக வழக்கு பதில் கோரும் உயர்நீதிமன்றம்
கோயில் விழா அழைப்பிதழில் ஜாதி பெயர் தவிர்க்கும் சுற்றறிக்கைக்கு எதிராக வழக்கு பதில் கோரும் உயர்நீதிமன்றம்
ADDED : ஏப் 02, 2025 03:43 AM
மதுரை : கோயில்களின் திருவிழா அழைப்பிதழில் ஜாதி மற்றும் சமூகங்களின் பெயர்களை அச்சிடுவதை தவிர்க்கும் அறநிலையத்துறை சுற்றறிக்கைக்கு தடை கோரிய வழக்கில் அத்துறையின் கமிஷனர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் நடுவிக்கோட்டை செல்வராஜ் ஏற்கனவே தாக்கல் செய்த மனு:
பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா ஏப்ரலில் நடைபெறும். இதற்கான அழைப்பிதழில் மண்டகப்படிதாரர்களில் அந்தந்த ஜாதிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. எங்கள் சமூக பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. அதில் 'ஊரார்' என குறிப்பிட்டுள்ளதற்கு பதிலாக எங்கள் சமூக பெயரை அச்சிடும்படி அறநிலையத்துறை கமிஷனர், கோயில் செயல் அலுவலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
பிப்.17 ல் இரு நீதிபதிகள் அமர்வு: ஹிந்து மதத்தைச் சேர்ந்த அனைவரையும் உள்ளடக்கி கோயில் திருவிழாக்களை கொண்டாட வேண்டும். வரும் காலங்களில் இக்கோயில் விழாக்களின் அழைப்பிதழில் வெவ்வேறு ஜாதி மற்றும் சமூகங்களின் பெயர்களை அச்சிடக்கூடாது. தேவைப்பட்டால், நன்கொடையாளர்களை பாராட்டி தனிப்பட்ட முறையில் ஒப்புதல் சான்றை கோயில் நிர்வாகம் அனுப்பலாம்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.
இவ்வழிகாட்டுதல்களை கோயில்களின் திருவிழாக்களில் நடைமுறைப்படுத்த அறநிலையத்துறை கமிஷனர் மார்ச் 5ல் அத்துறையின் இணை கமிஷனர்கள், கோயில்களின் செயல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பினார்.
இதை எதிர்த்து தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ராமலிங்கம் தாக்கல் செய்த பொதுநல மனு:
பாரம்பரியமாக நடைமுறையில் உள்ள சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்களுக்கு முரண்பாடாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மத விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமையை மீறும் வகையில் உள்ளது. இரு நீதிபதிகளின் உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.அறநிலையத்துறை கமிஷனரின் சுற்றறிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு அறநிலையத்துறை கமிஷனர் 4 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

