தரைதட்டிய கப்பலை ஆய்வு செய்ய வழக்கு பதில் கோரும் உயர்நீதிமன்றம்
தரைதட்டிய கப்பலை ஆய்வு செய்ய வழக்கு பதில் கோரும் உயர்நீதிமன்றம்
ADDED : ஆக 06, 2025 08:36 AM
மதுரை : சல்பர் ஏற்றிக் கொண்டு வந்து துாத்துக்குடி கடலில் தரை தட்டிய பனாமா கப்பலை திருப்பி அனுப்பும் முன் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ஆய்வு செய்ய தாக்கலான வழக்கில் மத்திய அரசு தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் ராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு:
பனாமாவை சேர்ந்த ஒரு கப்பல் 39 ஆயிரத்து 100 மெட்ரிக் டன் சல்பரை ஏற்றிக் கொண்டு ஜூலை 29 ல் துாத்துக்குடி வ.உ.சி.துறைமுகம் நோக்கி வந்தது. துறைமுகத்தை அடைவதற்கு சற்று துாரத்தில் தரை தட்டி நின்றது. சல்பர் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை. கப்பல் மீண்டும் கடலுக்குள் செல்லும்போது, பழுதடைந்து விபத்து நடந்தால், மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.சில மாதங்களுக்கு முன் ஒரு கப்பல் கேரளா கடல் பகுதியில் விபத்தை சந்தித்தது. அதிலிருந்த கன்டெய்னர்கள் உடைந்தன. அவற்றிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகள் வெளியேறி கடலை மாசுபடுத்தியது. துாத்துக்குடியிலுள்ள பனாமா கப்பலை வெளியேற்றுவதற்கு முன் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய கப்பல் போக்குவரத்துத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கிளீட்டஸ் ஆஜரானார்.
வ.உ.சி.,துறைமுக நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திலீப்குமார்: கப்பலிலிருந்த சல்பர் பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளனர். எவ்வித பாதிப்பும் இல்லை. கப்பலை மேலும் நிறுத்தி வைத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அதை திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை செயலர், துறைமுக நிர்வாகம் சார்பில் அடுத்தவாரம் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.