தென்கலை, வடகலை பிரச்னை முடிவடையாததாக இருக்கிறது ஐகோர்ட் அதிருப்தி
தென்கலை, வடகலை பிரச்னை முடிவடையாததாக இருக்கிறது ஐகோர்ட் அதிருப்தி
ADDED : ஆக 22, 2025 12:39 AM
சென்னை:'வைணவ சமயத்தில் தென்கலை, வடகலை பிரச்னை முடிவடையாத பிரச்னையாக இருக்கிறது' என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவில் குலசேகரபடியில் பொருத்தும் வெள்ளிக் கவசத்தில், வடகலை நாமம் பொறிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவிலில் உள்ள குலசேகரப்படியில் பொருத்துவதற்காக, 2011ம் ஆண்டு கே.பி.விஸ்வநாத் என்பவர், வெள்ளி கவசத்தை தானமாக வழங்கினார்.
சங்கு சக்கரத்துக்கு நடுவில், ஆதிசேஷனுடன் பொறிக்கப்பட்டிருந்த இந்த கவசத்தின் நடுவில், வடகலை நாமத்தை பொறிக்க உத்தரவிட வேண்டும் என, வடகலை ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாய சபை சார்பில், ஹிந்து அறநிலைய துறைக்கு விண்ணப்பிக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்து, அறநிலைய துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, வடகலை ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாய சபை மற்றும் சீனிவாசன் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில், 2016ல் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ''தேவையில்லாத சர்ச்சைகளை தவிர்க்கவே, அறநிலைய துறை இந்த முடிவை எடுத்துள்ளது. இதில் தலையிட முடியாது.
''இந்த விவகாரம் தொடர்பாக, உரிமையியல் நீதிமன்றத்தை தான் நாட வேண்டும். வைணவ சமயத்தில் வடகலை, தென்கலை பிரச்னை கவனமுடன் கையாள வேண்டிய, முற்றுப்பெறாமல் நீடிக்கும் பிரச்னையாக இருக்கிறது,'' எனக்கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

