விருப்பத்தின்பேரில் வீட்டைவிட்டு வெளியேறினால் ஆட்கொணர்வு மனுவா; உயர்நீதிமன்றம் அதிருப்தி
விருப்பத்தின்பேரில் வீட்டைவிட்டு வெளியேறினால் ஆட்கொணர்வு மனுவா; உயர்நீதிமன்றம் அதிருப்தி
ADDED : அக் 08, 2025 12:42 AM

மதுரை : சொந்த விருப்பத்தின்பேரில் வீட்டைவிட்டு ஆண், பெண் மாயமாகும்போது, அவர்களை கண்டுபிடிக்க ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தால் நீதிமன்றத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தியை பதிவு செய்தது. மதுரையை சேர்ந்த ஒரு ஆட்டோ டிரைவர் மாயமானார். அவரை மீட்டு ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிடக்கோரி மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது பெண் மாயமானார். அவரை கண்டுபிடித்து ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிடக்கோரி தாய் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஆர்.பூர்ணிமா அமர்வு விசாரித்தது.
தமிழக அரசு தரப்பில் மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திருவடிகுமார்: மனுதாரர்களின் உறவினர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின்பேரில் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். அவர்களை யாரும் சட்டவிரோதமாக தடுத்து வைக்கவில்லை. போலீசார் தேடி வருகின்றனர். காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க போலீசாருக்கு டி.ஜி.பி.,வழிகாட்டுதல்கள் பிறப்பித்துள்ளார். மாயமாகும் குழந்தைகள், பெண்களின் வழக்குகளை கையாள சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றனர்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: முதல் மனுதாரரின் கணவர் மீது போக்குவரத்து விதிகளை மீறியதாக போலீசார் வழக்கு பதிந்தனர். அந்த விரக்தியில் அவர் வீட்டைவிட்டு வெளியேறியிருக்கலாம். அவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு மனுதாரரின் மகள் கல்லுாரியில் படிக்கும்போது பேராசிரியருடன் காதல் ஏற்பட்டதால், அவருடன் மாயமாகிவிட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இவர்களை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகின்றனர். இதுபோல் மாயமானவர்களை கண்டுபிடிக்க ஆட்கொணர்வு மனு என்ற பெயரில் நீதிமன்றத்தின் அதிகாரத்தை பயன்படுத்துவது தவறானது என பல்வேறு நீதிமன்றங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
சொந்த விருப்பத்தின்பேரில் ஆண், பெண் மாயமாகும்போது, அவர்களை கண்டுபிடிக்க உத்தரவிடக்கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தால் நீதிமன்றத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்பது தெளிவாகிறது.
இரு மனுக்களும் விசாரணைக்கு ஏற்புடையவை அல்ல. காணாமல்போனவர்களை கண்டுபிடித்து ஆஜர்படுத்த ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்வது அதிகரிப்பது இந்நீதிமன்றத்தை கவலையடையச் செய்கிறது. இதுபோன்ற வழக்குகளை போலீசார் முறையாக கையாள்வதில்லை. இதனால் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்வது தொடர்கிறது. இதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.