கமிஷனரை நீக்கம் செய்ய உத்தரவிட நேரிடும் அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
கமிஷனரை நீக்கம் செய்ய உத்தரவிட நேரிடும் அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
ADDED : நவ 21, 2024 01:03 AM
சென்னை:'தேசிய பாரம்பரிய சின்னமான, விஜய வரதராஜ பெருமாள் கோவிலை பாதுகாக்க, அறநிலையத் துறை அதிகாரிகள் முனைப்பு காட்டாதது துரதிர்ஷ்டவசமானது.
'கோவில் தொடர்பாக, நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை, முறையாக பின்பற்றாவிட்டால், அறநிலையத்துறை கமிஷனரை நீக்கம் செய்ய உத்தரவிட நேரிடும்' என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், பாபுராயன்பேட்டை கிராமத்தில் உள்ள, ஸ்ரீ விஜய வரதராஜ பெருமாள் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
அவமதிப்பு வழக்கு
இக்கோவிலில், வடகலை வைணவ சம்பிரதாயப்படி, திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் பி.ஜெகந்நாத் என்பவர், பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த, 12 வாரங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, 2020ல் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என, வழக்கறிஞர் பி.ஜெகந்நாத், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய முதல் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கறிஞர் ஜெகந்நாத் ஆஜராகி, ''பழமையான கோவில், தற்போது மிகவும் சிதிலமடைந்து வருகிறது. கோவிலை சுற்றி முட்செடிகள் முளைத்து, புதர் மண்டியுள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை கோவில் கும்பாபிஷேகம் நடக்கவில்லை,'' எனக் கூறி, அதற்கான புகைப்படங்களை தாக்கல் செய்தார்.
இதைப் பார்த்த முதல் பெஞ்ச், ஹிந்து அறநிலையத்துறை கமிஷனர், பிற்பகலில் ஆஜராக உத்தரவிட்டது; பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, அறநிலையத் துறை கமிஷனர் பி.என்.ஸ்ரீதர் ஆஜரானார்.
அறநிலையத்துறை தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, 'கோவில் முழுமையும் ஆய்வு செய்யப்படும். ஒரு வாரத்துக்குள் சீரமைக்கும் பணிகள் துவக்கப்படும். பணிகள் முடிக்கப்பட்டு, அது தொடர்பான புகைப்பட ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படும்' என்றனர்.
துரதிர்ஷ்டவசமானது
இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. பொதுநல வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அப்படியிருந்தும், இந்த விஷயத்தை, ஹிந்து அறநிலையத்துறை அலட்சியத்துடனும், மந்த கதியிலும் செயல்பட்டுள்ளது. இது ஏமாற்றம் அளிக்கிறது.
மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்த புகைப்படங்களை பார்க்கும்போது, கோவில் குளம், வசந்த மண்டபம், மிகவும் சிதிலமடைந்துள்ளது தெரிகிறது. கோவிலின் பிரதான கோபுரத்தில், செடிகள் வளர்ந்துள்ளன.
இக்கோவில், பழமையான பாரம்பரிய நினைவு சின்னமாகும். இது, பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.
தேசிய பாரம்பரியம் மற்றும் கலாசார நினைவு சின்னங்கள், தேசிய சொத்தாகும். இதை பாதுகாக்கும் கடமையும், பொறுப்பும், பொதுமக்களுக்கும் உள்ளது.
பிரிட்டனில் உள்ள, 'ஸ்டோன் ஹெஞ்ச்' எனப்படும் கல்வட்ட சின்னம், ராஜஸ்தானில் உள்ள 'மவுண்ட் அபு' ஆகிய வரலாற்று சின்னங்கள், நன்கு பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.
பிரிட்டனில் உள்ள ஸ்டோன்ஹெஞ்ச், சுற்றுலா தலமாக மாறியுள்ளது. அதன் வாயிலாக, வருவாய் கிடைக்கிறது.
ராஜபுத்திரர்களின் கட்டடக் கலைக்கு சான்றாக, 'மவுண்ட் அபு' உள்ளது. மலை உச்சியில், ஜெயின் கோவில்கள் உள்ளன. இவை அனைத்தும் அழகு மிக்கவை. இன்றளவும் பாதுகாக்கப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்படுகின்றன.
மனுதாரர் கூறும் கோவிலும், தேசிய பாரம்பரிய சின்னமாகும். அத்தகைய கோவிலை பாதுகாக்க, அறநிலையத் துறை அதிகாரிகள் ஆர்வம் காட்டாதது துரதிர்ஷ்டவசமானது.
தள்ளிவைப்பு
கோவில் உள்ளிட்டவை தொடர்பாக, நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை, முறையாக பின்பற்றாவிட்டால், அறநிலையத்துறை கமிஷனரை நீக்கம் செய்யும்படியும், இணை ஆணையருக்கு, எந்தவித பதவி உயர்வும் வழங்கக்கூடாது என்றும், உத்தரவு பிறப்பிக்க நேரிடும்.
எனவே, உடனே அறநிலையத்துறை அதிகாரிகள், கோவிலை ஆய்வு செய்து, பணிகளை துவக்க வேண்டும். மேலும், புதர்களை அகற்ற வேண்டும். பணிகள் நடந்துள்ளதா என்பதை, மனுதாரர் நேரில் சென்று, புகைப்படங்கள் எடுத்து, நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கலாம்.
விஜய வரதராஜ பெருமாள் கோவிலில் இதுவரை நடந்துள்ள சீரமைப்பு பணிகள் என்ன, அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்பது குறித்து, அறநிலையத்துறை கமிஷனர் பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 29க்கு தள்ளி வைத்தனர்.