ரயத்துவாரி நில பிரச்னையை தீர்க்க உயர்நிலை குழு: அரசு நடவடிக்கை
ரயத்துவாரி நில பிரச்னையை தீர்க்க உயர்நிலை குழு: அரசு நடவடிக்கை
ADDED : அக் 11, 2025 11:35 PM
சென்னை:தமிழகத்தில் இனாம் ஒழிப்பு சட்டத்துக்கு பின், ரயத்துவாரியாக வகைப்படுத்தப்பட்டு, பட்டா வழங்கப்பட்ட நிலங்களை, பத்திரப்பதிவு செய்வதில் ஏற்படும் பிரச்னையை தீர்க்க, உயர் நிலை குழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆங்கிலேயர்களுக்கு முன் ஆட்சியில் இருந்தோர், தங்களுக்கு நம்பகமானவர்கள், உதவியவர்களுக்கு பெருமளவில் நிலங்களை இனாமாக வழங்கினர். இந்த நிலங்களை பெற்றவர்கள், பல்வேறு தலைமுறையாக பயன்படுத்தி வந்தனர்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இனாம் நிலங்களை முறைப்படுத்த, பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டன. இருப்பினும், இந்த நிலங்களுக்கு பட்டா பெறுவது போன்ற பணிகளில் சிக்கல் தொடர்ந்தது.
இந்நிலையில், 1963ல் இனாம் ஒழிப்பு சட்டத்தை, தமிழக அரசு நிறைவேற்றியது.
வகைப்பாடு மாற்றம் இதன் அடிப்படையில், இனாம் நிலங்கள் ஆய்வு செய்யப்பட்டு, ரயத்துவாரியாக வகைப்பாடு மாற்றம் செய்யப்பட்டு, உரிமையாளர்களுக்கு பட்டா வழங்கும் பணிகள் துவங்கப்பட்டன.
இதை பயன்படுத்தி, இனாம் நிலங்களை வைத்திருந்த பலர் பட்டா பெற்றனர். இருப்பினும், யு.டி.ஆர்., எனப்படும், நில உரிமை பதிவேடுகள் மேம்படுத்தும் திட்டத்துக்கு முன், பட்டா பெற்றவர்கள், நிலங்களை பத்திரப்பதிவு செய்வதில் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இதில், ஆவண ரீதியாக குழப்பம் உள்ள பழைய இனாம் நிலங்கள் என தெரியவந்த, 'சர்வே' எண்களை, பதிவுத்துறையும், வருவாய் துறையும் மொத்தமாக முடக்கும் நடைமுறை உள்ளது. இவ்வாறு முடக்கும் போது, தகுதி உள்ள நபர்களின் நிலமும் முடக்கப்படும் நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து, தலைமை செயலர் முருகானந்தம் தலைமையில், பல்வேறு துறை அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, பிரச்னை உள்ள நிலங்களை முடக்குவதில், புதிய நடைமுறையை பின்பற்ற முடிவு செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் நிலங்களை முடக்குவது, முடக்கப்பட்ட நிலங்களை விடுவிப்பதில் முடிவு எடுக்க, உயர் நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது.
சட்டத்துறை செயலர் வருவாய் துறை செயலர், நிலத்தை முடக்கவும் விடுவிக்கவும் கோரும் துறையின் செயலர், நில நிர்வாக ஆணையர், பதிவுத் துறை தலைவர், நில அளவை துறை இயக்குநர், சட்டத்துறை செயலர் ஆகியோர், இதில் உறுப்பினர்களாக இருப்பர்.
இக்குழுவின் ஒப்புதலுக்கு பின் தான், 'தமிழ்நிலம்' தகவல் தொகுப்பில் நிலங்கள் குறித்த விபரங்களை உறுதிப்படுத்த வேண்டும். இதற்கான அரசாணையை, வருவாய் துறை செயலர் அமுதா பிறப்பித்துள்ளார்.