உயர் பாதுகாப்பு 'நம்பர் பிளேட்' அரசு பதிலளிக்க உத்தரவு
உயர் பாதுகாப்பு 'நம்பர் பிளேட்' அரசு பதிலளிக்க உத்தரவு
ADDED : பிப் 18, 2024 05:58 AM
சென்னை : \ உயர் பாதுகாப்பு, 'நம்பர் பிளேட்' தயாரிக்கும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களை அறிவிக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதுகாப்பு மீறலுக்காக, வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்காக, அனைத்து வாகனங்களிலும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள் பொருத்துவதை கட்டாயமாக்கி, மத்திய அரசு உத்தரவிட்டது.
இதன்படி, 2019 ஏப்ர லுக்கு பின், புதிய வாகனங்கள் அனைத்திலும், உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்படுகின்றன. பழைய வாகனங்களுக்காக உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை உற்பத்தி செய்யவும் விற்கவும், பல நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கி உள்ளது.
இந்த நிறுவனங்களை மாநிலங்களில் நியமித்து, அதற்கான அறிவிப்பை மாநில அரசு வெளியிட வேண்டும். ஆனால், தமிழகத்தில் இதுவரை, உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் உற்பத்தி செய்யும் நிறுவனங்களாக, எதையும் அறிவிக்கவில்லை.
இதுகுறித்து, சென்னையைச் சேர்ந்த அய்யப்பன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள் பொருத்தவில்லை என, போலீசார் அபராதம் விதிக்கின்றனர். இதனால், அங்கீகாரம் இல்லாத நிறுவனங்கள் தயாரிக்கும் நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்படுகின்றன.
'இந்த சட்டவிரோத செயலை தடுக்க, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களை அறிவிக்க கோரி, அரசுக்கு அனுப்பிய மனுவை பரிசீலிக்க வேண்டும். அதுவரை, அபராதம் விதிக்க தடை விதிக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 26க்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.