விபத்து அபாய பகுதிகளில் 'ரோலர் சேப்டி பேரியர்' ஊட்டியில் நெடுஞ்சாலை துறை நடவடிக்கை
விபத்து அபாய பகுதிகளில் 'ரோலர் சேப்டி பேரியர்' ஊட்டியில் நெடுஞ்சாலை துறை நடவடிக்கை
ADDED : ஏப் 22, 2025 04:43 AM

ஊட்டி: ஊட்டி- மஞ்சூர் சாலையில் விபத்தை கட்டுப்படுத்த,'ரோலர் சேப்டி பேரியர்' தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
நீலகிரி மலை பாதையில் சாலை பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கொண்டை ஊசி வளைவு, குறுகலான சாலைகளில் கவனமுடன் செல்ல நெடுஞ்சாலை துறை சார்பில் ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஊட்டி- மஞ்சூர் சாலையில் கொண்டை ஊசி வளைவு, குறுகலான பகுதி, விபத்து அபாயம் உள்ள பகுதிகளை நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்தனர். அங்கு, விபத்துக்களை தடுக்க, 'ரோலர் சேப்டி பேரியர்' தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி , ஊட்டியிலிருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் ராக்லேண்ட் முதல் சாம்ராஜ் இடையே உள்ள சாலையில், விபத்துக்களை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், நவீன ரோலர் சேப்டி பேரியர் சாலையோரங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. எதிர்பாராத விதமாக வாகனங்கள் விபத்தில் சிக்கினால் பள்ளத்தில் கவிழாமல், தடுப்புகளில் மோதி மீண்டும் சாலையில் நின்று விடுகிறது.
நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் குழந்தை ராஜ் கூறுகையில்,'' இத்தகைய நவீன ரோலர் சேப்டி பேரியர் தடுப்பு அமைப்பதால் பெரிய விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க வாய்ப்பு உள்ளது. மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் விபத்து அபாயம் உள்ள பகுதிகளை கண்டறியப்பட்டு இத்தகைய பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.