நரிக்குறவர்கள் சமுதாயத்தினரை மதம் மாற்ற சதி: ஹிந்து முன்னணி
நரிக்குறவர்கள் சமுதாயத்தினரை மதம் மாற்ற சதி: ஹிந்து முன்னணி
UPDATED : ஆக 08, 2025 11:03 AM
ADDED : ஆக 08, 2025 01:44 AM
திருப்பூர்:“நரிக்குறவர் சமுதாயத்தை மதம் மாற்ற திட்டமிட்ட சதிக்கு, தமிழக அரசு துணை போகிறது,” என்று ஹிந்து முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.
அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
சுடுகாடு
பிரச்னை பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா எறையூர் கிராமத்தில், 250க்கும் மேற்பட்ட ஹிந்து நரிக்குறவர் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர்.
அவர்களிடம் தொடர்ந்து ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி, கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றி வருகின்றனர். மதமாற்றம் காரணமாக, கிராமத்தில் பல ஆண்டுகளாக சுடுகாடு பிரச்னை இருக்கிறது.
சில தினங்களுக்கு முன், கிறிஸ்துவ மதத்துக்கு மாறிய குடும்பத்தில் இருந்த ஹிந்து பெண் இறந்து விட்டார். அவரது கடைசி ஆசை, ஹிந்து முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்பது.
ஆனால், அவருடைய குடும்பத்தினர் மதம் மாறியதால், 'கிறிஸ்துவ முறைப்படி தான் அடக்கம் செய்வோம். சிலுவை நடுவோம்' என பிரச்னை செய்துள்ளனர்.
ஒட்டுமொத்த ஹிந்து நரிக்குறவர் சமுதாய மக்களும் எதிர்த்து போராடினர். இதன் விளைவாக, ஹிந்து முறைப்படி உடல் அடக்கம் செய்யப்பட்டது.
வலுக்கட்டாயம்
ஹிந்து மக்களுக்காக குரல் கொடுத்தார் என்ற ஒரே காரணத்துக்காக, அதே சமுதாயத்தைச் சேர்ந்த ஹிந்து முன்னணி பெரம்பலுார் மாவட்ட செயலர் செல்வகுமாரை, காவல்துறை வலுக்கட்டாயமாக அதிகாலையில் கைது செய்துள்ளது.
எறையூர் மற்றும் மதுராபுரி உள்ளிட்ட பகுதிகளில் நரிக்குறவர் சமுதாயத்தினர் குறிவைக்கப்பட்டு, கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உரிமைக்காக போராடிய நரிக்குறவர் சமுதாய இளைஞரை, 15 கி.மீ., தாண்டி ரோட்டை மறித்ததாக பொய் வழக்கு போட்டு கைது செய்தனர்.
இப்படி பொய் வழக்கு போட்டு, நரிக்குறவர் சமுதாய மக்களை மிரட்டுவது தொடர்கதையாகி உள்ளது.
இவ்வாறு கூறியுள்ளார்.