மதுரை சித்திரை திருவிழாவில் அடிப்படை வசதிகள் செய்து தர ஹிந்து முன்னணி கோரிக்கை
மதுரை சித்திரை திருவிழாவில் அடிப்படை வசதிகள் செய்து தர ஹிந்து முன்னணி கோரிக்கை
ADDED : ஏப் 25, 2026 09:16 PM

திருப்பூர்: 'மதுரை சித்திரை திருவிழாவில், பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்' என, ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது.
அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் திருக்கல்யாணம் மற்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா, விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு விழாவில், பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தர, ஹிந்து சமய அறநிலையத்துறை முனைப்புடன் செயல்பட வேண்டும்.
அக்னி வெயில் சுட்டெரிப்பதால், பக்தர்கள் தங்க நிழற்குடைகள், குடிநீர் வசதி, போக்குவரத்து நெரிசலை சரி செய்வது உள்ளிட்ட முக்கிய பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். வாகனங்கள் நிறுத்த, 'பார்க்கிங்' வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். அன்னதானம், நீர் மோர் பந்தல் உள்ளிட்ட சமூக பணிகளில் ஈடுபடும் மக்களுக்கு, எந்த விதமான தொந்தரவையும் அரசு செய்யக்கூடாது.
மீனாட்சி திருக்கல்யாணத்தை காண, பக்தர்களுக்கு வழங்கும் டிக்கெட்டுகளில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது. டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பது, கண்டனத்துக்குரியது.திருக்கல்யாணம், தரிசனம் தொடர்பான தகவல்களை இணைய வழியில் தருவதாக ஹிந்து சமய அறநிலையத்துறை அறிவித்தது. ஆனால், இணைய பக்கம் முடக்கப்பட்டிருக்கிறது.
இதுபோன்ற முறைகேடுகளை அதிகாரிகள் ஆராய்ந்து, அடிப்படை வசதிகளை செய்து தருவதுடன், முறையான தரிசனத்தை பக்தர்கள் பெற, தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.
