கோவில் முன் இறைச்சி கடைகள் அகற்ற ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
கோவில் முன் இறைச்சி கடைகள் அகற்ற ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
ADDED : ஜன 10, 2025 08:35 PM
திருப்பூர், ஜன. 11-தமிழகம் முழுவதும் கோவில்கள் அருகேயுள்ள இறைச்சி கடை மற்றும் அசைவ உணவு கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என ஹிந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
கோவை, உடையாம்பாளையம், மாரியம்மன் கோவில் அருகே, மாட்டிறைச்சி பிரியாணி கடை அமைக்கப்பட்டது. ஊர்க் கட்டுப்பாடு மற்றும் கோவில் புனிதம் கருதி அதை அகற்றிக் கொள்ள, ஊர் பிரமுகர் சுப்ரமணியம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் கடை உரிமையாளர், சில முஸ்லிம் அமைப்பினருடன், கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம், 'சுப்பிரமணியம் எங்களை மாட்டுக்கறி பிரியாணி கடை நடத்தக்கூடாது என மிரட்டுகிறார்,' என புகார் அளித்தனர்.
முழுமையாக விசாரிக்காமல் போலீசாரும் சுப்பிரமணியம் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளனர்.
கோவில் என்பது புனிதமான இடம். அதன் முன்பு இறைச்சி பிரியாணிக் கடை நடத்துவது பக்தர்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது.
இதேபோல தமிழகத்தில், பல கோவில்களின் முன், இறைச்சி கடைகள் உள்ளன. தேர் வலம் வரும் ரத வீதிகளிலும் இறைச்சி கடைகளை நடத்தி வருகின்றனர். ஹிந்துக்களின் சமய நம்பிக்கைகளை மதிக்காத வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இக்கடைகளை அனுமதிக்கக்கூடாது. இக்கடைகளின் சுகாதாரம் குறித்தும் அரசு கவலைப்படுவதில்லை.
எங்கெல்லாம் கோவில்களைச் சுற்றி, இது போன்ற அசைவ உணவு கடை, இறைச்சிக் கடை இருக்கிறதோ, அவற்றை தமிழக அரசு உடனடியாக அகற்ற வேண்டும். கோவையில் நடந்த சம்பவத்தை கண்டித்த அப்பகுதியினர் கடையை அகற்றவும், சுப்ரமணியம் மீதான வழக்கை திரும்ப பெறவும் வலியுறுத்தி திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். சுப்பிரமணியம் மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.