தீபத்துாணில் தீபமேற்ற வலியுறுத்தி இந்து முன்னணியினர் கூட்டு வழிபாடு
தீபத்துாணில் தீபமேற்ற வலியுறுத்தி இந்து முன்னணியினர் கூட்டு வழிபாடு
UPDATED : நவ 20, 2026 08:15 PM
ADDED : நவ 20, 2026 08:15 PM
நாமக்கல்: திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்ற வலியுறுத்தி, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், இந்து முன்னணி சார்பில் கூட்டு வழிபாடு நடந்தது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், காத்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, இந்து முன்னணி மற்றும் முருக பக்தர்கள் பேரவை சார்பில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், கூட்டு வழிபாடு நடத்தி கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தர்மதுரை தலைமை வகித்தார். சேலம் கோட்ட செயற்குழு உறுப்பினர் சரவணன் முன்னிலை வகித்தார்.
இதுகுறித்து, கோட்ட செயலாளர் சரவணன் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், கார்த்திகை தீபம் ஏற்ற தமிழக அரசும், ஹிந்து சமய அறநிலையத்துறையும் முன்வர வேண்டும். இது தொடர்பாக நடந்து வரும் வழக்கில், விரைவில் தீர்ப்பு கிடைத்து, தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும். அனைத்து ஹிந்து மக்களும், தீபம் ஏற்றுவதை காணும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. இதற்காக ஆஞ்சநேயரிடம் கூட்டு வழிபாடு நடத்தி முறையிட்டுள்ளோம். அனைத்து மதத்தினருக்கும் சமமான அரசு என்று கூறப்படும் நிலையில், ஹிந்துக்களின் உணர்வுகளுக்கு எதிராக அரசு செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், திருப்பரங்குன்றம் தீபத்துாணில், தீபம் ஏற்ற நிபந்தனைகளுடன், உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதையடுத்து, இந்து முன்னணியினர், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் முன், 108 தேங்காய் உடைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
