ஹிந்துக்கள் 100 சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தி ஹிந்து மக்கள் கட்சி பிரசாரம்
ஹிந்துக்கள் 100 சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தி ஹிந்து மக்கள் கட்சி பிரசாரம்
ADDED : ஆக 23, 2025 02:20 AM

தஞ்சாவூர்: ஹிந்துக்கள், தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என்ற பிரசார இயக்கத்தை ஹிந்து மக்கள் கட்சி நேற்று துவங்கியது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று விநாயகர் சிலை பிரதிஷ்டை நடைபெற்றது.
மேலும், தேர்தலில், 'ஹிந்துக்கள் நுாறு சதவீதம் ஓட்டளிக்க வேண்டும்' என்ற பிரசாரத்தையும், ஹிந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் துவக்கி வைத்தார். பின், அவர் அளித்த பேட்டி:
ஹிந்து மக்கள் கட்சி சார்பில், தமிழகத்தில் முதன்முறையாக கும்பகோணத்தில், 'விவசாயம் காக்கும் விநாயகர் சிலை' பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்திக்காக, 50,000 சிலைகள் பிரதிஷ்டை செய்ய உள்ளோம். துணை ஜனாதிபதி தேர்தலில், தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற வேண்டும்.
தமிழகத்தில், தி.மு.க., அரசை வீழ்த்தி, பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என விநாயகர் முன் பிரார்த்தனை செய்தோம்.
தேசிய அளவில் எப்படியோ, அது போலவே தமிழகத்திலும், 'தேசிய ஜனநாயக கூட்டணியா, இண்டி கூட்டணியா' என்ற அரசியல் நிலை தான் உள்ளது.
முருகன் மாநாட்டை அமைதியாக, ஒழுக்கமாக நாங்கள் நடத்தியதை பார்த்து, அனைவரும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். வரும் 2026 தேர்தலில், ஹிந்துக் களின் கோரிக்கைகளை ஏற்கும் கூட்டணியாக பா.ஜ.,- அ.தி.மு.க., உள்ளது.
திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என, நீதிமன்றத்தில் ஹிந்து அறநிலையத்துறை மனு தாக்கல் செய்துள்ளதை கண்டிக்கிறோம். கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற ஹிந்து விழாக்களுக்கு, வாழ்த்து கூட சொல்ல முடியாத, ஹிந்துக்களுக்கு எதிரான முதல்வராக ஸ்டாலின் உள்ளார்.
இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் நுாறு சதவீதம் ஓட்டளிப்பது போல், ஹிந்துக்களும், கட்டாயமாக, தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என பிரசாரம் செய்ய இருக்கிறோம். அப்போதுதான், ஹிந்து ராஜ்யம் அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.