திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் ஹிந்து அமைப்பினர் கோரிக்கை
திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் ஹிந்து அமைப்பினர் கோரிக்கை
ADDED : அக் 12, 2025 05:08 AM

திருப்பரங்குன்றம் : மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் இந்தாண்டு கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என ஹிந்து அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடக் கூடாது, திருப்பரங்குன்றம் மலையை 'திருப்பரங்குன்றம் மலை' என்று மட்டுமே தொடர்ந்து அழைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
அதை கொண்டாடும் வகையில் ஹிந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன், பொதுச் செயலாளர் குபேர ராஜ்குமார், ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார், அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ராமலிங்கம், மாவட்டத் தலைவர் சக்திவேல் உள்ளிட்டோர் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை செய்தனர்.
அவர்கள் கூறியதாவது: திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் மலை விவகாரம் குறித்த வழக்கில் நீதிமன்றம் கொடுத்த உத்தரவிற்கு நன்றி தெரிவிக்கவும், உத்தரவை சுவாமியின் பாதத்தில் சமர்ப்பிப்பதற்காகவும் ஹிந்து அமைப்பு சகோதரர்கள் மட்டுமல்லாது முருக பக்தர்கள் சார்பில் சிறப்பு பூஜை செய்தோம்.
இந்த வழக்கில் வாதாடிய அனைத்து வழக்கறிஞர்களுக்கும், தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கும் நன்றி. மற்ற மத வழிபாடுகள் குறித்தான விஷயங்களில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அவர்கள் நடத்திக் கொள்ளட்டும். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் முருக பக்தர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை அரசு திரும்ப பெற வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டுமென மறைந்த ஹிந்து முன்னணி தலைவர் ராஜகோபாலன் கோரிக்கை வைத்திருந்தார். முன்பு ஆண்டாண்டு காலமாக கார்த்திகை மகா தீபம் மலை உச்சியில் உள்ள தீப துாணில்தான் ஏற்றப்பட்டு வந்தது.
அங்கு தீபம் ஏற்ற வேண்டும் என நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. கோயில் நிர்வாகம் அங்கு கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும். நிர்வாகம் தவறும் பட்சத்தில் நாங்களே சட்டரீதியாக தீபத்துாணில் தீபம் ஏற்றுவோம் என்றனர்.