அண்ணாதுரை நினைவு நாளில் அன்னதானம் தடை விதிக்க ஹிந்து தமிழர் கட்சி கோரிக்கை
அண்ணாதுரை நினைவு நாளில் அன்னதானம் தடை விதிக்க ஹிந்து தமிழர் கட்சி கோரிக்கை
ADDED : பிப் 03, 2025 06:58 AM
சென்னை : 'அண்ணாதுரை நினைவு நாளில், ஹிந்து கோவில்களில் அன்னதானம் போடக்கூடாது' என, ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 56வது நினைவு தினம், இன்று தமிழகம் முழுதும் அனுசரிக்கப்படுகிறது. கடவுள் மறுப்பு சித்தாந்தம் கொண்ட அண்ணாதுரை, 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற, திருமூலரின் கருத்தை தன் கருத்தாக வெளிப்படுத்தினார்.
தன் வாழ்நாளில் ஹிந்து பழக்க வழக்க பாரம்பரிய வழிபாட்டு முறைகளை ஏற்காதவர்.
அப்படிப்பட்ட ஒரு நபரின் நினைவு தினத்தை, மதச்சார்பற்ற தமிழக அரசு, ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், உண்டியல் பணத்தை எடுத்து, சமபந்தி விருந்து போட்டு அனுசரிக்கிறது.
அண்ணாதுரை நினைவு நாளில், எத்தனை சர்ச், மசூதிகளில், சமபந்தி விருந்துகள் நடத்தப்படுகின்றன என்பது குறித்து, தமிழக அரசு விளக்க வேண்டும்.
நாயன்மார்கள், ஆழ்வார்கள், ஹிந்து சமய பெரியோர்களின் ஜென்ம நட்சத்திர பிறந்த நாளில், சமபந்தி விருந்து நடத்தாத தமிழக அரசு, அண்ணாதுரை நினைவு தினத்தில் மட்டும் அன்னதானம் போடுவது ஏன்?
அவரை ஏற்றுக்கொண்ட கட்சிகளுடைய தலைவர்களின் வீடுகளில், அன்னதானம் போட்டுக் கொள்ளலாம். அதை யாரும் ஆட்சேபிக்க வில்லை. அதை விடுத்து, ஹிந்து சமய நம்பிக்கையாளர்கள், கோவில்களுக்கு கொடுக்கும் காணிக்கை பணத்தை எடுத்து, அன்னதானத்திற்கு பயன்படுத்துவதை ஏற்க முடியாது.
எனவே, இன்று தமிழக கோவில்களில் மட்டும் நடக்க உள்ள, அண்ணாதுரை நினைவு நாள் சமபந்தி விருந்தை தடை செய்ய வேண்டும். நீதிமன்றம் தானாக முன்வந்து, இதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

