தனியார் மயத்திற்கான முன்னேற்பாடே வாடகை பஸ் இயக்கம்: அன்புமணி
தனியார் மயத்திற்கான முன்னேற்பாடே வாடகை பஸ் இயக்கம்: அன்புமணி
ADDED : அக் 22, 2024 07:25 PM
சென்னை:'தீபாவளிக்கு வாடகை பஸ்களை இயக்குவது, அரசு போக்குவரத்து கழகங்களை தனியார்மயத்திற்கான முன்னேற்பாடு' என, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக, தனியார் பஸ்கள் வாடகைக்கு எடுத்து இயக்கப்படும் என்று, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறியிருக்கிறார். மக்கள் வசதிக்காக என்ற போர்வைக்குள் மறைந்து கொண்டு, அரசின் சார்பில் தனியார் பஸ்களை இயக்குவதை அனுமதிக்க முடியாது.
அரசு போக்குவரத்து கழகங்களில் போதிய பஸ்கள் இல்லை என்பதால்தான், தனியார் பஸ்களை இயக்க ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுகிறது என்று, தமிழக அரசின் சார்பில் கூறப்படும் காரணத்தை ஏற்க முடியாது.
தனியார் பஸ்களை திணிக்க வேண்டும் என்பதற்காகவே, அரசுப் போக்குவரத்து கழகங்களில் போதிய எண்ணிக்கையில் பஸ்கள் இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 8,182 புதிய பஸ்களை வாங்க ஆணை பிறப்பிக்கப் பட்டது. ஆனால், மூன்றரை ஆண்டுகளில், 1,088 பஸ்கள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளன. அரசு போக்குவரத்து கழகங்களில், 25 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஒப்பந்தப் பணியாளர்களை மட்டும் அரசு நியமித்திருக்கிறது. இவை அனைத்தும் தனியார் மயமாக்கத்திற்கான முன்னேற்பாடுகள்.
போதுமான பஸ்களை வாங்கி, புதிய பணியாளர்களை நியமித்து, அரசு போக்குவரத்து கழகங்களை லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து, தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்கும் தொழிலாளர் விரோத செயல்களில் அரசு ஈடுபடக்கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.