எச்.எம்.பி.வி. வைரஸ் பரவல்: அ.தி.மு.க., மருத்துவரணி எச்சரிக்கை
எச்.எம்.பி.வி. வைரஸ் பரவல்: அ.தி.மு.க., மருத்துவரணி எச்சரிக்கை
ADDED : ஜன 07, 2025 09:50 AM

மதுரை: சீனாவில் அதிகமாக பரவி தற்போது தமிழகத்தில் வந்துள்ள எச்.எம்.பி.வி. வைரஸ் காய்ச்சலை எப்போதும் போல மெத்தன போக்கை தமிழக அரசு கடைபிடிக்கக் கூடாது , இது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என அதிமுக மருத்துவரணி மருத்துவரணி இணை செயலாளர் டாக்டர் பா.சரவணன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
இன்ஃப்ளூயன்ஸா,ஏ,எச்எம்பிவி, மைக்கோப்ளாஸ்மா,நிமோனியா, கோவிட் 19 ஆகிய வைரஸ் சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது இதனைத் தொடர்ந்து தற்போது சீனாவில் உள்ள பேஜின், சீனாவின் தென்மேற்கு நகரமான சோங்கிங், தென் சீனாவில் உள்ள குவாட்டாங் போன்ற பகுதிகளில்HMPV காய்ச்சல் அதிகமாக பரவியது . அங்குள்ள கல்வி நிலையங்களுக்கு எல்லாம் விடுமுறை அளிக்கப்பட்டு விட்டது. மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது
குறிப்பாக 14 வயதுக்குள்ள குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன, இதில் மிகவும் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அதிகமாக பாதி படுகின்றனர் ,மேலும் 65 வயதிற்கு மேற்பட்டோர் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோய் ஆரம்பத்தில் இருமல் சளி,மூக்கடைப்பு, காய்ச்சல், தொண்டை வலி ஏற்படும்,அதனைத் தொடர்ந்து சுவாசிப்பதில் சிரமம், மூச்சு திணறல், அதனைத் தொடர்ந்து நிம்மோனியா வாய்ப்பு உள்ளது, குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும், இணை நோய் உள்ளவர்களுக்கும், நுரையீரல் பிரச்சனை,சுவாசக் கோளாறு, ஆஸ்துமா ஆகியவை எளிதில் பாதிப்பு ஏற்படும்.
இந்த வைரஸ் பாதிப்பு உள்ளவர்களிடமிருந்து இருமல், தும்மல் எச்சில் வழியாக பரவுகிறது குறிப்பாக தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும். இதற்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் காய்ச்சல் மருந்துகள், வலி மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். நீர்ச்சத்து குறையாமல் தண்ணீர் அருந்த வேண்டும் ஓய்வு எடுக்க வேண்டும்.
பங்குச்சந்தையில் சரிவு
குறிப்பாக இந்த காய்ச்சல் தற்போது இந்தியாவில் புகுந்து விட்டது. பெங்களூரில் மூன்று மாத குழந்தைக்கும்,8 மாத குழந்தைக்கும் இந்த காய்ச்சல் வந்துவிட்டது. அதேபோல் குஜராத்தில் உள்ள இரண்டு மாத குழந்தைக்கு வந்துவிட்டது. தற்போது சென்னையில் இரண்டு குழந்தைக்கு வந்துவிட்டது. இவர்கள் யாருமே வெளிநாடு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வைரஸ் 2001 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பாக கடந்த 2023 ஆண்டு நெதர்லாந்து, பிரிட்டன், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா,அமெரிக்கா ஆகிய நாடுகளில் வந்த போது உடனடியாக தடுக்கப்பட்டது. இதற்கெல்லாம் மேலே இன்றைக்கு பங்குச்சந்தையில் இந்தியாவில் இந்த வைரஸ் காய்ச்சல் புகுந்து விட்டதால் முதலீட்டார்கள் அச்சம் அடைந்தனர் . இதனால் பங்குச்சந்தை சரிவு 9 லட்சம் கோடி சரிவு ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் அரசு விழித்துப் பார்க்க வேண்டும் .
ஆகவே எப்போதும் போல இந்த வைரஸ் காய்ச்சலை ஸ்டாலின் அரசு இதை எண்ணாமல் நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும், சுகாதாரத்துறை அமைச்சர் நாள் தோறும் வாக்கிங் சென்று தன் உடலை மட்டும் காப்பது மட்டுமல்லாது ,மக்கள் உயிரையும் காக்க பணியில் ஈடுபட வேண்டும்.
குறிப்பாக தேவையான அளவில் மருந்து மாத்திரைகள் இருப்பு வைத்திருக்க வேண்டும், ஆக்ஸிஜன் இருப்பு வைத்திருக்க வேண்டும் . 24 மணிநேரமும் தமிழக எல்லையை கண்காணிக்க வேண்டும் பஸ்,ரயில், விமானத்தில் வரும் பயணிகளை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு சரவணன் கூறியுள்ளார்.

