ADDED : டிச 14, 2024 09:47 AM

தருமபுரி: தொடர்ந்து பெய்து வரும் கனமழை எதிரொலியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கனமழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள் மட்டுமல்லாது, உள் மாவட்டங்களிலும் மழை பதிவாகி உள்ளது. தொடரும் கனமழையால் ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இந் நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 7,000 கனஅடியாக இருந்த ஆற்றின் நீர்வரத்து இன்று (டிச.14) 8,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,198 கனஅடியாக சரிந்துள்ளது. அணைக்கு வந்து கொண்டிருந்த நீரின் வரத்து 6,384 கன அடியில் இருந்து தற்போது 6,198 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 117.57 அடியாகவும், நீர் இருப்பு 89.648 டி.எம்.சி.,யாகவும் இருக்கிறது.
டெல்டா பாசனத்துக்காக அணையில் இருந்து 1,000 கன அடி நீரும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் இருந்து 300 கன அடி நீரும் திறந்துவிடப்படுகிறது.