இலங்கை பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துங்க; பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இலங்கை பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துங்க; பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
UPDATED : அக் 16, 2025 03:02 PM
ADDED : அக் 16, 2025 02:59 PM

சென்னை: இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமர சூரியா உடன் மீனவர்கள் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்துமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை. இந்தியாவுக்கு வருகை தந்துள்ள அந்நாட்டு பிரதமரிடம் பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும்.
தமிழக மீனவர்கள் பிரச்னையில் தூதரக நடவடிக்கை மூலம் மத்திய அரசு தலையீட்டை தொடர்ந்து கோரி வருகிறோம். தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு 72 முறை கடிதம் எழுதியுள்ளேன் மாநில அரசின் முறையான ஒப்புதலை பெறாமல் மத்திய அரசால் கச்சத்தீவு இலங்கைக்கு மாற்றப்பட்டது.
தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமைகளை மீட்டெடுக்க இலங்கை பிரதமரிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் நீண்ட கால மற்றும் துயரமான பிரச்னைகளை தீர்க்க இது மிகவும் முக்கியமானதாகும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.