காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
ADDED : அக் 16, 2025 04:38 PM

சென்னை: வரும் 18-ம் தேதி தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியிலும், 24-ம் தேதி தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியிலும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நிருபர்களை சந்தித்த இந்திய வானிலை மையத்தின் தென் மண்டலத் தலைவர் அமுதா கூறியதாவது: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், காயல்பட்டினம் உள்ளிட்ட 3 இடங்களில் மிக கனமழை பதிவாகி உள்ளது. அங்கு 15 செ.மீ., மழை பெய்துள்ளது. ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடியில் கனமழை பெய்துள்ளது.
அக்., 1 முதல் 16-ம் தேதி வரை 10 செ.மீ., மழை பதிவாகியது. இயல்பாக 7 செ.மீ., மழை பெய்ய வேண்டும். தற்போது இயல்பில் இருந்து 37 சதவீதம் மழை அதிகம் பதிவாகியுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வரும் 18 ம் தேதி வாக்கில் தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் கேரளா தெற்கு கர்நாடகா பகுதிகளுக்கு அப்பால் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளது.
வரும் 24ம் தேதி தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் சாத்தியம் இருக்கிறது.
இன்று முதல் 18 ம் தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மழை பெய்யக்கூடும்.
மீனவர்கள் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திரா, கேரள கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 25 - 26 டிகிரிசெல்சியசும் வெப்பம் பதிவாகக்கூடும். நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்துக்கு வழக்கமாக வடகிழக்கு பருவமழை மூலம் 44 செ.மீ., மழை பதிவாகும். இந்த ஆண்டு 50 செ.மீ., மழை பதிவாக வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்