ADDED : மார் 29, 2025 04:58 AM

சென்னை : ''விற்பனையை அதிகரிக்கும் வகையில், 'இல்லம் தேடி பட்டு' திட்டம் செயல்படுத்தப்படும்,'' என, கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
சட்டசபையில் கைத்தறி மற்றும் துணிநுால் துறை மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து, அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அடிப்படை கூலியில், 10 சதவீதமும், அகவிலைப்படியில், 10 சதவீதமும் உயர்த்தி வழங்கப்படும், இதனால், 2.50 லட்சம் நெசவாளர்கள் பயன் பெறுவர்
கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில், புதுமையான ரகங்களை அறிமுகப்படுத்த, 1.55 கோடி நிதி உதவி வழங்கப்படும்
ஈரோடு, சென்னிமலை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க விற்பனையை மேம்படுத்த, நவீன விற்பனை நிலையம், கணினி தொழில்நுட்ப வடிவமைப்பு மையம் அமைக்கப்படும். 15 தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில், வடிவமைப்பு மேம்பாட்டுக்காக, 1.20 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்
திறன்மிகு நெசவாளர் விருதுக்கான முதல் பரிசு தொகை, 10,000 ரூபாயில் இருந்து, 25,000 ரூபாயாகவும், இரண்டாம் பரிசு, 6,000 ரூபாயில் இருந்து, 15,000 ரூபாயாகவும், மூன்றாம் பரிசு, 4,000 ரூபாயில் இருந்து, 10,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும்
வீட்டு உபயோக கைத்தறி ரகங்கள் ஏற்றுமதியை அதிகரிக்க, ஈரோட்டில் மூன்று கைத்தறி நெசவாளர் சங்கங்களுக்கு, 27 நவீன தையல் இயந்திரங்கள் வழங்கப்படும்
கைத்தறி துணிகள் விற்பனையை அதிகரிக்க, மாநில அளவில், ஐந்து சிறப்பு கைத்தறி கண்காட்சிகள், கரூர், தஞ்சை, ஈரோடு, மதுரை, ராமநாதபுரம் நகரங்களில், 1.50 கோடி ரூபாயில் நடத்தப்படும்
பருத்தி மற்றும் கைத்தறி ரகங்களில் புதுமையான, சந்தைப்படுத்தக்கூடிய வடிவமைப்புகளை உருவாக்கும் சிறந்த வடிவமைப்பாளர் விருதுக்கான முதல் பரிசு தொகை, 25,000 ரூபாயில் இருந்து, ஒரு லட்சம் ரூபாயாகவும், இரண்டாம் பரிசு தொகை, 10,000 ரூபாயில் இருந்து, 75,000 ரூபாயாகவும், மூன்றாம் பரிசு தொகை, 5,000 ரூபாயில் இருந்து, 50,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்
தஞ்சை மாவட்டம், திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் விற்பனையை அதிகரிக்கும் வகையில், 'இல்லம் தேடி பட்டு' என்ற திட்டம் செயல்படுத்தப்படும். இதனால், ஆண்டுக்கு கூடுதலாக, 10 கோடி ரூபாய் வரை பட்டு விற்பனை அதிகரிக்கும்
கைத்தறி நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்ட உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெற, 59 முதல் 60 வயதுக்குள், 6 மாதங்களுக்கு மேல் தொழில் செய்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டு, 56 முதல், 60 வயதுக்குள், ஐந்தாண்டுகளில் ஓராண்டு தொழில் செய்து இருக்க வேண்டும் என மாற்றப்படும்
காஞ்சிபுரத்தில் உள்ள தமிழக ஜரிகை ஆலையில், எக்ஸ்.ஆர்.எப்., ஜரிகை பகுப்பாய்வு இயந்திரம், 25 லட்சம் ரூபாய் மதிப்பில் நிறுவப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.