கைதானாலும் போராட்டம் தொடரும் கவுரவ விரிவுரையாளர்கள் அறிவிப்பு
கைதானாலும் போராட்டம் தொடரும் கவுரவ விரிவுரையாளர்கள் அறிவிப்பு
ADDED : ஜன 24, 2025 12:57 AM
கிருஷ்ணகிரி:'கைது செய்தாலும் போராட்டம் தொடரும்' என, தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கவுரவ விரிவுரையாளர்கள் கூறினர்.
கவுரவ விரிவுரையாளர்களுக்கு, மதுரை உயர் நீதிமன்ற கிளை கூறியதை போல, 50,000 ரூபாய் மாத ஊதியம் வழங்க வலியுறுத்தி, கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரி வளாகத்தில், கவுரவ விரிவுரையாளர்கள், 20க்கும் மேற்பட்டோர் நேற்று, இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் கிருஷ்ணகிரி டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு பேச்சு நடத்தினார். ஆனால், 'எங்களை கைது செய்தாலும் மாத ஊதியம், 50,000 ரூபாய் வழங்கும் வரை, எங்கள் போராட்டம் தொடரும்' என, கவுரவ விரிவுரையாளர்கள் கூறினர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:
போராட்டம் குறித்து, கல்லுாரி முதல்வர் அனுராதா, தர்மபுரி மண்டல கல்லுாரிகளின் இயக்குநருக்கும், உயர்கல்வித்துறை மண்டல இணை இயக்குநருக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்.
அவர்கள் அளித்த விளக்கத்தில், கவுரவ விரிவுரையாளர்கள் ஊதியம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாக ஒரு கடிதத்தைக் காண்பித்தனர். அதில் வழக்கு எண், விபரங்கள் இல்லை.
எங்கள் போராட்டத்தை நிறுத்தும் நோக்கத்திலேயே செயல்படுகின்றனர். எங்களுக்கு மாத ஊதியம், 50,000 ரூபாய் வழங்கும் வரை, நாங்கள் கைது செய்யப்பட்டாலும் எங்கள் போராட்டம் தொடர்ந்து நடக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.