'கவுரவ விரிவுரையாளர்களுக்கு மே மாத சம்பளம் கிடையாது'
'கவுரவ விரிவுரையாளர்களுக்கு மே மாத சம்பளம் கிடையாது'
ADDED : மே 20, 2025 05:10 AM

சென்னை : திருவண்ணாமலையை சேர்ந்த, அரசு கலைக்கல்லுாரி கவுரவ விரிவுரையாளர் ராதிகா, பல்கலை மானிய குழு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, தங்களுக்கு மதிப்பூதியமாக, மாதம் 50,000 ரூபாய் வழங்க வேண்டும்; மே மாதம் உட்பட 12 மாதங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நீதிமன்றம் சில அறிவுறுத்தல்களை அரசுக்கு வழங்கியது. அதன் அடிப்படையில், ராதிகாவுக்கு கல்லுாரி கல்வி கமிஷனர் சுந்தரவல்லி அனுப்பி உள்ள கடிதம்:
தமிழக உயர்கல்வி துறை அரசாணைப்படி, கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் மற்றும் கல்வியியல் கல்லுாரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு, மாதம், 20,000 ரூபாயாக இருந்த மதிப்பூதியம், 25,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது. கவுரவ விரிவுரையாளர்களின் பணி நியமனம், சம்பந்தப்பட்ட கல்லுாரி முதல்வர்களால் வழங்கப்படுகிறது.
பல்கலை மானிய குழு பரிந்துரையின்படி, கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படவில்லை. எனவே, அவர்களுக்கு மே மாதத்திற்கும் சேர்த்து, 12 மாதங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டிய நிலை ஏற்படவில்லை. தங்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.