ADDED : ஜூலை 29, 2025 07:28 AM
சென்னை, : அரியலுார், கடலுார், புதுக்கோட்டை, விழுப்புரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில், 2.06 லட்சம் ஏக்கரில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. முந்திரி தேவை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில், உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
நாடு முழுதும் உள்ள முந்திரி தயாரிப்பு ஆலைகளுக்கு, ஆண்டுதோறும் 18 லட்சம் டன் முந்திரி கொட்டைகள் தேவை.
இதற்காக, தமிழகத்தில் உள்ள முந்திரி தயாரிப்பு ஆலைகள் உட்பட, நாடு முழுதும் உள்ள ஆலைகளுக்கு ஆப்ரிக்க நாடுகளில் இருந்து, 13 லட்சம் டன் வரை முந்திரி கொட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.
இதை கருத்தில் வைத்து, தமிழகத்தில் முந்திரி சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், ஏற்கனவே உள்ள முந்திரி தோட்டங்களில் மகசூலை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக, 2011ல் ஏற்பட்ட புயல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பின், பயன்பாடு இல்லாமல் கிடக்கும் தோட்டங்களை கண்டறிந்து, அவற்றில் முந்திரி மறுநடவு செய்ய, வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.