தீபாவளி தீக்காய சிகிச்சைகளுக்கு தயார் நிலையில் மருத்துவமனைகள்
தீபாவளி தீக்காய சிகிச்சைகளுக்கு தயார் நிலையில் மருத்துவமனைகள்
UPDATED : நவ 06, 2026 07:12 PM
ADDED : நவ 05, 2026 06:15 PM
சென்னை: ‘தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள், 24 மணி நேரமும் செயல்பட வேண்டும்’ என, தமிழக மக்கள் நல்வாழ்வு துறை உத்தரவிட்டுள்ளது.
தீபவாளி பண்டிகையை ஒட்டி, பட்டாசு வெடிக்கும்போது சிலர் விபத்துகளில் சிக்குகின்றனர். இவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்காவிட்டால், வாழ்நாள் முழுதுமான பாதிப்பாக மாறி விடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் பட்டாசு விபத்துகளுக்கு சிகிச்சை பெறுகின்றனர்.
அதேபோல், ‘டெங்கு, இன்ப்ளுயன்ஸா’ போன்ற காய்ச்சல்களும் பரவி வருகின்றன. எனவே, தீபாவளி அன்று, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகளின் ஒவ்வொரு துறையிலும் டாக்டர்கள் கட்டாயம் பணியில் இருக்க வேண்டும் என, மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறியதாவது:
தீபாவளியொட்டி நாளை முதல், 9ம் தேதி வரை, அரசு மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். குறிப்பாக, தீக்காய சிகிச்சை, சாலை விபத்துகளுக்கான சிகிச்சை, காய்ச்சல் மற்றும் அவசரகால சிகிச்சை என, அனைத்தும் தயார் நிலையில் இருக்கும்.
வட்டார ஆராம்ப சுகாதார நிலையங்களில், 24 மணி நேரமும் டாக்டர்கள், செவிலியர்கள் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
அனைத்து சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு இல்லாத தீபாவளியை உறுதி செய்ய, மக்கள் நல்வாழ்வு துறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
