ADDED : அக் 23, 2024 02:25 AM
சென்னை:'ஓசூர் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் பணியை, தமிழக அரசு விரைவுப்படுத்த வேண்டும்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களின் ஒட்டுமொத்த சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில், ஓசூரில், 2000 ஏக்கர் நிலப்பரப்பில் ஆண்டுக்கு, 3 கோடி பயணியரை கையாளக்கூடிய, சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின், ஜூன் 27ல் அறிவித்தார்.
இந்நிலையில் 3000 ஏக்கர் அளவுக்கு காலி இடம் இருக்கும் சோமனஹள்ளி என்ற இடத்தில், பெங்களூருவின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க, கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
ஓசூரில் சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டால், பெங்களூருவின் முக்கியத்துவம் குறைந்து விடுமோ என்ற எண்ணத்தில், ஓசூருக்கு அருகில் உள்ள சோமனஹள்ளியில் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை அமைக்க, கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
ஒசூர் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது.
தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஓசூரில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க தேவையான நடவடிக்கைகளை, தி.மு.க., அரசு விரைந்து எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.