UPDATED : அக் 13, 2026 12:13 AM
ADDED : அக் 12, 2026 10:24 PM

ஜே.கமலம், நெல்லை:
'தீபாவளியை முன்னிட்டு, 'ஆன்லைன்' பட்டாசு விற்பனையில் நடக்கும் மோசடிகளில், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என, தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா கூறியுள்ளாரே?
'ஆன்லைன்' மட்டுமல்ல; 'தீபாவளி சீட்டு' என, கிராம அளவில், தெருக்கள் அளவில் வசூல் செய்து, 'கம்பி' நீட்டும் களவாணிகளும் உள்ளனர். இவர்களிடம் ஏமாந்து போகாமல் இருக்க, மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இந்த மோசடிக்கெல்லாம் அரசோ, போலீசோ கடிவாளம் போடுவது மிகவும் கடினம்.
ம.வித்யா, பெங்களூரு:
அ.தி.மு.க., தாராபுரத்தில் வெற்றி பெறும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், இந்த தோல்விக்கு யார் காரணம்?
'ரத்தத்தின் ரத்தங்கள்' என, எம்.ஜி.ஆரால் போற்றப்பட்டவர்கள், பழனிசாமியின் நடவடிக்கைகளால் நொந்து போயுள்ளது தான் காரணம்!
டி.என்.பாலகிருஷ்ணன், சென்னை:
புதுவை தட்டாஞ்சாவடியில், தி.மு.க., 'டிபாசிட்' இழந்தது குறித்து?
தி.மு.க., ஆட்டம், திண்டாட்டம் ஆகிவிட்டது என்பதை உணர்த்துகிறது.
சாரதா கோபால், சென்னை:
நடுத்தர வர்க்கத்தினர் அஞ்சல் அலுவலகங்களில் உள்ள சேமிப்பு திட்டங்களில் சேரலாமா?
பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியை பார்த்தால், வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் சேமிப்பதே சிறந்தது. ஆனால், வங்கிகளின் சேவைகளை மொபைல்போனில் உபயோகிக்கும்போது கவனம் தேவை. இல்லையெனில் களவாணிகள் நம் பணத்தை, 'ஆட்டை'யை போட்டு விடுவர்.
எம்.பி.தினேஷ், கோவை:
மெட்ரோ ரயில் திட்டத்தை தாங்கள் கொண்டு வந்ததாக ஸ்டாலின் தம்பட்டம் அடிக்கிறாரே?
'ஸ்டிக்கர்' ஒட்டியே பழகிவிட்டார். அதை அவ்வளவு எளிதில் கைவிட முடியவில்லை.
கே.வந்தனா, கொலம்பஸ், அமெரிக்கா:
'உச்சநீதிமன்றத்தின் மன்னிக்கும் மனப்பான்மையால், நாட்டில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன...' என்கிறாரே உச்சநீதிமன்ற நீதிபதி தீபாக்கர் தத்தா!
அவரே உச்சநீதிமன்ற நீதிபதி ஆயிற்றே... அவர் தெரிந்து தானே சொல்வார். உச்சநீதிமன்றம் தெளிந்தால் நல்லது.
