UPDATED : நவ 17, 2026 12:00 AM
ADDED : நவ 16, 2026 10:25 PM

அந்துமணி பதில்கள் (பெண்டிங்)
அ.ரவீந்திரன், கன்னியாகுமரி:
எதிர்க்கட்சித் தலைவரான, தி.மு.க.,வின் உதயநிதி செய்ய வேண்டிய அரசியலை, அவரது அத்தை கனிமொழி செய்கிறார் என, தி.மு.க.,வினர் பேசிக் கொள்கின்றனரே?
அண்ணன் ஸ்டாலின் மற்றும் மூத்த உறுப்பினர்களின் ஆலோசனைப்படி தான், கனிமொழி செயல்படுகிறார் என்றும், அதே தி.மு.க.,வினர் தான் சொல்கின்றனர்!
பொன்விழி, அன்னுார்:
கருணாநிதி குடும்பத்தை தாண்டி, தி.மு.க.,வை வழிநடத்த தகுதியானவர் தற்போது யார் இருக்கின்றனர்?
கருணாநிதி குடும்பத்திலேயே யாரும் இருப்பது போல் தெரியவில்லையே!
* க.ராஜேஷ், நீலகிரி:
‘விசாரணையை தாமதப்படுத்தினால் குற்றம் சாட்டப்பட்டவரின் ஜாமின் ரத்து செய்யப்படும்’ என, நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்து இருப்பது பற்றி?
‘அப்படி போடு போடு போடு...’ன்னு பாடத் தோன்றுகிறது. இனி, ‘தெரியாது, மறந்து விட்டது’ போன்ற பதில்கள் குறையும் என எதிர்பார்ப்போம்; சாட்சிகளை கலைப்பதும் குறைய வேண்டும்.
பி.கிருஷ்ணன், ராமநாதபுரம்:
நாகர்கோவிலில், பெண்களைக் கேலி செய்தவர்களைக் கண்டித்த, சிங்கப்பெண் அதிரடிப் படை போலீசார் மீது தாக்குதல் நடத்தி இருக்கின்றனரே?
பெண்களை கேலி செய்யும் சம்பவங்கள், அவர்களிடம் அத்துமீறும் சம்பவங்கள் பல்கிப் பெருகி விட்டதற்குக் காரணம், மதுபோதையும், போதைப்பொருள் பயன்பாடும் தான். இப்படிப்பட்டவர்களுக்கு, சிங்கப் பெண்கள் என்ன... தங்கள் தாயே தட்டிக் கேட்டாலும் ஒன்றும் புரியாது; தாம் செய்வது தவறு என்பதும் புரியாது. போதை இறங்கிய பின் தான், சாதா நிலைக்கு வருவர்; அதற்குள் அத்தனை அவமானங்களும் வந்து சேர்ந்து விடும்!
* ஜி.கோகுல கிருஷ்ணன், திருவாரூர்:
கடந்த 12 ஆண்டுகளாக 50 கோடி பேர் வறுமை கோட்டிற்கு மேல் உயர்ந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் அடைந்துள்ளாரே?
இந்த தகவலை ஊடகங்கள் உலகறிய செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இந்தியர் ஒவ்வொருவரும் இச்செய்தியை பகிர்ந்து பெருமைப்பட வேண்டும். செய்வோமா கோகுலகிருஷ்ணன்?
வை.கவுசல்யா, மதுராந்தகம்:
‘இந்திரா அன்று அமல்படுத்திய அவசரநிலை அறிவிப்பு தவறானது என்று இன்று குறிப்பிடும் சோனியாவின் கருத்து பற்றி?
இன்று கூறி என்ன பயன்... தவறே என்றாலும் முன்னாள் பிரதமர் இந்திராவின் காலத்தில் இதை எடுத்துச் சொல்ல யாருக்காவது தைரியம் இருந்ததா?
