UPDATED : அக் 30, 2026 12:00 AM
ADDED : அக் 29, 2026 11:10 PM
ப.சோமசுந்தரம், சென்னை:
‘ஆளுங்கட்சி கூட்டணி குழம்பிய குட்டை; அதில் மீன் பிடிக்க முடியாது’ என்கிறாரே, தி.மு.க., சேகர்பாபு?
குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது தானே, அதிக சாமர்த்தியம்... அதை சேகர்பாபு மறந்து விட்டாரே!
ஜி.கிருஷ்ணமூர்த்தி, சென்னை:
‘கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த அனைத்து சட்டசபை தேர்தல்களையும் ரத்து செய்வதுடன், இனி வரும் அனைத்து தேர்தல்களிலும், ஓட்டு சீட்டு முறையையே பின்பற்ற வேண்டும்’ என்று, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினாரே... என்னாயிற்று இப்போது?
தங்கள் கட்சிக்கு இந்திய அளவில் மவுசே இல்லை என்பது, கார்கேவுக்கும், ராகுலுக்கும் இப்போது புரிந்திருக்கும். நான்கு மாநில சட்ட மேல்சபைத் தேர்தலுக்கும் ஓட்டுச் சீட்டு முறை தான் பின்பற்றப்பட்டது. நான்கு மாநிலங்களிலும், காங்கிரஸ் மண்ணைக் கவ்வி, ‘செம உதை’ வாங்கி விட்டதே!
ர.ரேவதி, புதுச்சேரி:
‘நடிகர் தனுஷ் அ.தி.மு.க.,வில் இணைய உள்ளாரா என்பது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். அ.தி.மு.க., கட்சிக்கு யார் வந்தாலும் வரவேற்கிறோம்’ என்கிறாரே முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்?
உயரிய நோக்கத்துடன் எம்.ஜி.ஆர்., ஆரம்பித்த கட்சி, ஜெயலலிதாவின் காலத்தில் மிக கட்டுக்கோப்பாக நடத்தப்பட்ட கட்சியின் இன்றைய நிலையை பாருங்கள் ரேவதி!
கே.ராஜா, நெய்வேலி:
‘காமராஜர் ஆட்சி காங்கிரசின் கனவு’ என, அமைச்சர் ராஜேஷ்குமார் கூறுவது குறித்து?
காங்கிரஸ் ஆட்சி என்பதே இனி கனவு தான். இதில் எங்கிருந்து காமராஜர் ஆட்சி கொடுக்கப் போகின்றனர்!
ப.லட்சுமியம்மாள், கடலுார்:
பெண்ணாடம் அருகே கோவிலில் அம்மன் கண்களை துணியால் கட்டிவிட்டு நகையை கொள்ளை அடித்திருக்கின்றனரே?
கடவுளுக்கு பயந்த கொள்ளையன் என்று தெரிகிறது. அவனது சிறுவயதில் அவனது அம்மா, ‘தப்பு செய்தால் சாமி கண்ணை குத்தும்’ என்று கூறியிருப்பார் போலும்!
ம.நடராஜன், நாகர்கோவில்:
அடுத்த கைது யாராக இருக்கும் அந்துமணி?
பா.ம.க., ராமதாஸ் பாணியில், ‘போக போக தெரியும்...’ என்று பாட தோன்றுகிறது நடராஜன்.
ந.ராதா, தென்காசி:
பழைய 2,000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதே?
இதில் எத்தனை பெருச்சாளிகளும், முதலைகளும் மாட்டப் போகின்றனரோ!
