ADDED : ஜன 24, 2026 06:21 AM

சென்னை; தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு பின், வீட்டு கணக்கெடுப்பு பணிகள் துவக்கப்பட உள்ளன.
நாடு முழுதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்கிறது. அதற்கு முன்னதாக, ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை, வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் நடக்கின்றன.
இந்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து, அனைத்து மாநில தலைமை செயலர்கள் ஆலோசனைக் கூட்டம், நேற்று டில்லியில் நடந்தது.
இந்த கூட்டத்தில், நாடு முழுதும் பல்வேறு மாநிலங்களில், சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் நடக்க இருப்பதால், அந்த மாநில சூழல்களுக்கு ஏற்ப, வீடுகள் கணக்கெடுப்பு பணிகளை துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் வீடுகள் கணக்கெடுப்பு பணிகளை துவக்குவதற்கான தேதிகளை பரிந்துரை செய்யும்படி, மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம் சார்பில், தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால், வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில், மாநிலம் முழுதும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் நடத்த, அரசு தரப்பில் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

