வீட்டுவசதி வாரிய நில ஒதுக்கீடு: சிக்கலில் அமைச்சர்
வீட்டுவசதி வாரிய நில ஒதுக்கீடு: சிக்கலில் அமைச்சர்
ADDED : பிப் 14, 2024 02:26 AM
சென்னை:'முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலருக்கு, வீட்டுவசதி வாரிய நிலத்தை ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் பெரியசாமியை விடுவித்த உத்தரவை, தாமாக முன்வந்து ஆய்வுக்கு எடுத்த வழக்கின் உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது.
'அமைச்சர் விடுவிப்பை எதிர்த்து, லஞ்ச ஒழிப்புத் துறை ஏன் மேல்முறையீடு செய்யவில்லை' என்றும் கேள்வி எழுப்பியது.
இந்த வழக்கில், இறுதி விசாரணை நேற்று முன்தினம் துவங்கியது. அமைச்சர் பெரியசாமி சார்பில், டில்லி மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார் ஆஜராகி வாதாடினார்.
லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''அமைச்சருக்கு எதிராக வழக்கு தொடர, கவர்னரிடம் தான் அனுமதி பெற வேண்டும். வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவுக்கு, கடந்த ஆண்டு ஜனவரியில், லஞ்ச ஒழிப்புத் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் விடுவிக்கக் கோரிய மனு, விசாரணைக்கு ஏற்புடையது அல்ல என்று கூறப்பட்டுள்ளது. சாட்சி விசாரணை துவங்கிய பின், இடையில் விடுவிக்க கோர முடியாது,'' என்றார்.
அப்போது, நீதிபதி கூறியதாவது:
கவர்னரிடம் ஏன் முறையான அனுமதியை, லஞ்ச ஒழிப்புத்துறை பெறவில்லை; கவர்னரை அணுகி, வழக்கு தொடர அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
சிறப்பு நீதிமன்றமும், கவர்னரிடம் அனுமதி பெறும்படி, லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிடவில்லை. வழக்கில் இருந்து விடுவித்ததை எதிர்த்து, லஞ்ச ஒழிப்பு துறை ஏன் மேல்முறையீடு செய்யவில்லை?
ஒரே ஒரு சாட்சி மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணை நீண்ட துாரத்தை கடந்து விடவில்லை. அதனால், கவர்னரிடம் அனுமதி பெறலாம். அமைச்சராக இருப்பவர், நேர்மையாக இருக்க வேண்டும். அதிகாரத்தில் இருப்பவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையை, மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதி கூறினார்.
இவ்வழக்கில், வழக்கறிஞர்கள் வாதங்கள் முடிந்த நிலையில், உத்தரவை தேதி குறிப்பிடாமல், நீதிபதி தள்ளிவைத்தார்.

