கட்டுமான பணிகள் பாதியில் முடக்கம் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் விசாரணை
கட்டுமான பணிகள் பாதியில் முடக்கம் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் விசாரணை
ADDED : மே 12, 2026 02:48 AM
சென்னை: வீட்டு வசதி வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்ட, வணிக வளாக கட்டுமான பணிகள் பாதியில் முடங்கியது குறித்து, அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வீட்டு வசதி வாரியம் சார்பில், குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இதில் வீடு வாங்க, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.
இந்நிலையில், குடியிருப்பு திட்டங்களுடன், அடுக்குமாடி வணிக வளாகம் கட்டும் திட்டங்களையும், வீட்டு வசதி வாரியம் செயல்படுத்தி வருகிறது.
ஏற்கனவே செயல்பட்டு வந்த வணிக வளாகங்களை இடித்து விட்டு, அடுக்குமாடி வணிக வளாகங்கள் கட்டப்படுகின்றன.
அந்த வகையில், சென்னை பீட்டர்ஸ் காலனி, மதுரை தோப்பூர், கிருஷ்ணகிரி ஓசூர், வேலுார் சத்துவாச்சாரி ஆகிய இடங்களில், அடுக்கு மாடி வணிக வளாகங்கள் கட்டப்படுகின்றன. இதில், பெரும்பாலான வணிக வளாகங்களில், கட்டுமானப் பணிகள், இறுதி கட்டத்தில் உள்ளன. இந்த பணிகளை, 2026 மார்ச் இறுதிக்குள் முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி கட்டுமானப் பணிகளை முடிக்க, ஒப்பந்ததாரர்களை வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால், மார்ச் மாதத்தில் தேர்தல் அறிவிக்கும் முன்பே, கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், குறிப்பிட்ட காலத்தில், வாரிய வணிக வளாகங்கள், பயன்பாட்டுக்கு வராமல் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, வீட்டுவசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக, கட்டுமானப் பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஏற்பட்டது.
இதை காரணம் காட்டி, ஒப்பந்ததாரர்கள் குறிப்பிட்ட சில பணிகளை நிறுத்தி உள்ளதாக தெரிய வந்துள்ளது. இப்பிரச்னை குறித்து விசாரித்து வருகிறோம். விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு, வாரிய வணிக வளாகங்கள், பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
