உய்யகொண்டான் கால்வாயில் கழிவுநீர் எப்படி தடுக்கப் போகிறீர்கள்? நீர்வளத்துறைக்கு தீர்ப்பாயம் கேள்வி
உய்யகொண்டான் கால்வாயில் கழிவுநீர் எப்படி தடுக்கப் போகிறீர்கள்? நீர்வளத்துறைக்கு தீர்ப்பாயம் கேள்வி
ADDED : ஜூலை 08, 2025 10:49 PM
சென்னை:'திருச்சி உய்யகொண்டான் கால்வாயில், கழிவுநீர் கலப்பதை எவ்வாறு தடுக்கப் போகிறீர்கள்' என, திருச்சி மாநகராட்சி மற்றும் நீர்வளத்துறைக்கு, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில், பல குளங்களுக்கு நீராதாரமாக உய்யகொண்டான் கால்வாய் உள்ளது. மாநகருக்குள் 8 கிலோ மீட்டர் செல்லும் போது, சுற்றியுள்ள வீடுகள், வணிக நிறுவனங்களில் இருந்து கழிவுநீர் நேரடியாக கால்வாயில் கலக்கிறது.
கழிவுநீர் சுத்திகரிப்பு
இதுபற்றி, 2024 டிசம்பரில் நாளிதழ்களில் செய்தி வெளியானது. அதனால், தாமாக முன்வந்து, வழக்கு பதிந்து விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
உய்யகொண்டான் கால்வாயில், கழிவுநீர் கலக்கும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை தடுக்க, 'ஸ்மார்ட் சிட்டி, அம்ருத்' உள்ளிட்ட திட்டங்களின் கீழ், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், பாதாள சாக்கடை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருவதாக, திருச்சி மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அறிக்கை தாக்கல்
இது, 2027 அக்டோபருக்குள் செயல்பாட்டுக்கு வரும் என மாநகராட்சி கூறியுள்ளது. அதுவரை கால்வாயில், கழிவுநீர் கலப்பதை எவ்வாறு கட்டுப்படுத்தப் போகின்றனர் என்பது குறித்து, திருச்சி மாநகராட்சி கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
கால்வாயை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள நீர்வளத்துறை, உய்யகொண்டான் கால்வாயை பழைய நிலைக்கு மீட்டெடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
விதிமீறல்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, மத்திய சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்ற அமைச்சகம், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர், 2ல் நடக்கும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.