இங்கு யாரையாவது யாரும் வெட்டினால் அதற்கு நான் எப்படி பொறுப்பாவேன்?:செய்தியாளர்களை அதிரவைத்த அமைச்சர்
இங்கு யாரையாவது யாரும் வெட்டினால் அதற்கு நான் எப்படி பொறுப்பாவேன்?:செய்தியாளர்களை அதிரவைத்த அமைச்சர்
ADDED : டிச 21, 2024 07:35 PM
புதுக்கோட்டை:புதுக்கோட்டையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி:
கோவையில் அல்-உம்மா இயக்கத்தைச் சேர்ந்த பாட்ஷாவின் இறுதி ஊர்வலம் நடந்தது. அதில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படக் கூடாது என்பதற்காக, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதில் தவறு இல்லை. அவருடைய சமுதாத்தினரும், உறவுக்காரர்களும் கூடி இறுதி ஊர்வலத்தில் பெரும் திரளாக கலந்து கொண்டுள்ளனர். அதை அரசுத் தரப்பில் தடுக்க முடியாது.
கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டதாலேயே எவ்வித அசம்பாவிதமும் நடைபெறவில்லை.
பா.ஜ.,வினர் எப்போதும் கைகளில் ஆயுதம் வைத்திருப்பவர்கள். அது நாட்டுக்கே தெரியும். தி.மு.க., அப்படி அல்ல. அமைதி வழியில் செல்வததை தான் விரும்புகிறோம்.
முன்னாள் முதல்வர் பழனிசாமி, அம்பேத்கரை அவமரியாதை செய்து பேசிய அமித் ஷாவை கண்டிக்கவில்லை. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பதில் தான் என்னுடைய பதில் என்கிறார். அப்படியென்றால், அ.தி.மு.க.,வுக்கு ஜெயகுமார், பொதுச்செயலராக இருக்கலாமே.
தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் சிதறி உள்ளன. அது எங்களுக்கு சாதமான விஷயம் தான் என்றாலும், தலைவர் ஸ்டாலின் அதை விரும்ப மாட்டார். ஆரோக்கியமான கடும் போட்டி இருக்க வேண்டும் என்றே விரும்புவார்.
நெல்லையில் நீதிமன்றம் அருகே ஒருவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில், இரண்டு மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இருந்தபோதும், சட்டம்-ஒழுங்கு சரியில்லை என குற்றம்சாட்டுகின்றனர். நாட்டில் நடக்கும் எல்லா குற்ற நிகழ்வுகளையும் போலீசால் தடுக்க முடியாது. சம்பவம் நடந்து விட்டால், குற்றவாளிகள் உடனே கைது செய்யப்படுகின்றனரா என்றுதான் பார்க்க வேண்டும்,
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில்கூட யாரேனும் ஒரு நபர், இன்னொருவரை அரிவாளால் வெட்ட போகிறார் என்பதை யாராலும் முன் கூட்டியே கவனிக்க முடியுமா? ஒருவேளை, குற்ற சம்பவம் நிகழ்ந்துவிட்டால், அதற்காக, அமைச்சர் முன்னிலையில் அரிவாளால் வெட்டி கொலை என்று செய்தி போட முடியுமா? அதற்கு நான் எப்படி பொறுப்பாவேன்?
நடப்பது எதையும் யாரும் தடுக்க முடியாது.
கவர்னரை மாற்றுங்கள் என குரல் கொடுத்தால், அவரை நிரந்தமாக இங்கேயே இருக்க வைத்துவிடுவர். அதனால், அதை வலியுறுத்த மாட்டோம்.
வரும் ஜன., 6ல் நடைபெற உள்ள சட்டசபை கூட்டம் கவர்னர் உரையுடன் துவங்கும். கடந்த ஆண்டில் நடந்த சம்பவம் போல இந்தாண்டு நடக்காது என நினைக்கிறோம். அப்படி ஏதும் நடந்தாலும், நாங்களும் பதிலடி கொடுப்போம்.
பொங்கல் அன்று யு.ஜி.சி., நெட் தேர்வு நடத்தப்படுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நாங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைப்போம்.
வரும் 2026 சட்டசபை தேர்தலில் இருமுனை போட்டிதான் இருக்கும். தமிழகத்தில் தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு என தனித்த மரியாதை உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.