சிதம்பரம் கோவில் தீட்சிதர் விவகாரத்தில் அறநிலைய துறை எப்படி தலையிட முடியும்?
சிதம்பரம் கோவில் தீட்சிதர் விவகாரத்தில் அறநிலைய துறை எப்படி தலையிட முடியும்?
ADDED : அக் 22, 2024 04:31 AM
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில், பொது தீட்சிதர்கள் குழு உறுப்பினரான நடராஜ தீட்சிதர் என்பவர், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த உத்தரவை, அறநிலைய துறை இணை ஆணையர் ரத்து செய்தார்.
'இத்தகைய உத்தரவு பிறப்பிக்க இணை ஆணையருக்கு அதிகாரம் இல்லை. எனவே, அதை ரத்து செய்ய வேண்டும்' என, சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் குழு செயலர் வெங்கடேஷ தீட்சிதர் வழக்கு தொடர்ந்தார்.
அறநிலைய துறை உத்தரவை அமல்படுத்தக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடராஜ தீட்சிதரும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்குகள், நீதிபதி எம்.தண்டபாணி முன், விசாரணைக்கு வந்தன. நடராஜ தீட்சிதர் சார்பில், வழக்கறிஞர் சி.கனகராஜு ஆஜரானார்.
பொது தீட்சிதர்கள் குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிசங்கர், ''உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகிக்க, பொது தீட்சிதர்கள் குழுவுக்கு தான் அதிகாரம் உள்ளது; அறநிலைய துறை தலையிட முடியாது,'' என்றார்.
அறநிலைய துறை சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன், 'கோவிலில் நிர்வாக முறைகேடு போன்ற புகார்கள் எழும் போது, அறநிலைய துறை சட்டப்படி தலையிட முடியும்.
சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின், ஒழுங்குப்படுத்தும் அதிகாரங்கள் தொடர்பாக விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன' என்றார்.
இதையடுத்து, 'சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகிக்க, உச்ச நீதிமன்றம் பொது தீட்சிதர்களுக்கு தான் அதிகாரம் வழங்கி உள்ளது.
அப்படி இருக்கும் போது, தீட்சிதர், சஸ்பெண்ட் விவகாரத்தில் அறநிலைய துறை எப்படி தலையிட முடியும். நடராஜ தீட்சிதரின். சஸ்பெண்ட் காலம் முடிந்து விட்டது.
தற்போது, அவர் தில்லை காளியம்மன் கோவிலில் சேவை செய்து வருகிறார். பொது தீட்சிதர்கள் குழு முடிவில், அறநிலைய துறை தலையிட அதிகாரம் உள்ளதா, இல்லையா என்பதை, சிறப்பு அமர்வுக்கு விட்டு விடுகிறேன்' என்று கூறிய நீதிபதி, இரண்டு வழக்குகளையும் முடித்து வைத்து உத்தரவிட்டார்.