'ஜனநாயகன்' படமே வெளியாகாத நிலையில் எப்படி புகார் வரும்: தயாரிப்பு நிறுவனம் கேள்வி
'ஜனநாயகன்' படமே வெளியாகாத நிலையில் எப்படி புகார் வரும்: தயாரிப்பு நிறுவனம் கேள்வி
ADDED : ஜன 07, 2026 12:03 AM

சென்னை: 'நடிகர் விஜய் நடித்த, ஜனநாயகன் படத்துக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்' என, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம், பொங்கலை முன்னிட்டு, ஜன., 9ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என, படக்குழு அறிவித்துள்ளது. ஆனால், இதுவரை படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை.
எனவே, தணிக்கை சான்று வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், படத்தயாரிப்பு நிறுவனமான, கே.வி.என். புரொடக் ஷன்ஸ் எல்எல்பி., சார்பில், வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி பி.டி.ஆஷா முன், அவசர வழக்காக, நேற்று பிற் பகல் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது, படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில், மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் வாதாடியதாவது:
கடந்த ஆண்டு டிசம்பரில், படம் தணிக்கை வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
படத்தை ஆய்வு செய்த தணிக்கை வாரியம் சில காட்சிகளை நீக்கவும், வசனங்களை நீக்கவும் அறிவுறுத்தியது. அத்தனை நிபந்தனைகளையும் பூர்த்தி செய்து, படம் மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது.
மீண்டும் படத்தை ஆய்வு செய்த வாரியம், படம் யு/ஏ சான்று பெற தகுதி உள்ளது என பரிந்துரைத்தது. மேலும், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாகவும், படத்துக்கு எதிராக புகார் வந்து உள்ளதாகவும் கூறி, படத்தை மறு ஆய்வு குழுவுக்கு, வாரியம் அனுப்பி வைத்துள்ளது. படமே இன்னும் வெளியாகவில்லை.
யாரும் படத்தை பார்க்காத நிலையில், எப்படி புகார் அளிக்கப்பட்டது என்பதற்கு பதில் இல்லாததால், படத்துக்கு சான்று வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் வாதாடினார்.
தணிக்கை வாரியம் தரப்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ''இந்த படத்தில் உள்ள சில காட்சிகள், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாக புகார் வந்ததால் மறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்தில், சான்று வழங்க வேண்டும் என, நிர்பந்திக்க முடியாது,'' என்றார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, படத்துக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை தாக்கல் செய்ய, தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டு, இன்று விசாரணையை தள்ளிவைத்தார்.
அப்போது, 'பட வெளியீடு தேதியை முடிவு செய்தாலும், சட்டப்படி தான் செல்ல முடியும். தணிக்கை வாரியத்தின் அறிவுறுத்தல்களை பெற வேண்டும்' என, தணிக்கை வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ''படம் வெளியீட்டை ஏன் தள்ளி வைக்கக்கூடாது; தை பிறந்தால் வழி பிறக்குமே,'' என, படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில், 'படம் வெளியாகும் தேதி, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது' என, தெரிவிக்கப்பட்டது.

