'நயினார் போட்டியிட்டால் எப்படி எதிர்ப்பது?': கட்சியினர் கேள்வியால் திணறிய கனிமொழி
'நயினார் போட்டியிட்டால் எப்படி எதிர்ப்பது?': கட்சியினர் கேள்வியால் திணறிய கனிமொழி
ADDED : மே 15, 2025 05:00 AM

திருநெல்வேலி : திருநெல்வேலி, துாத்துக்குடி தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு தி.மு.க., தேர்தல் பொறுப்பாளராக கனிமொழி எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, திருநெல்வேலி மத்திய மாவட்டத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கனிமொழி பங்கேற்றார்.
அதில் அவர் பேசியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் தி.மு.க., வெற்றி பெற வேண்டும். அதற்கான யோசனைகளை, அடுத்தவர் மனம் புண்படாத அளவுக்கு எல்லோரும் சொல்ல வேண்டும். அதை வைத்து, தேர்தலில் தி.மு.க., என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவெடுப்போம்.
உண்மையை மறைக்காமல், கள நிலவரத்தை சொல்லுங்கள். அப்போதுதான், தேர்தலுக்கு முன், ஆட்சி அதிகாரம் வாயிலாக மக்களுக்கு நல்ல காரியங்களை செய்ய முடியும். இவ்வாறு கனிமொழி பேசினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய கட்சியினர், ''திருநெல்வேலி எம்.எல்.ஏ.,வான தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், தி.மு.க., அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் நெருக்கமாக பழகுகிறார். முதல்வருடனும் நெருக்கமாக இருக்கிறார்.
சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் நெல்லையில் அவர் மீண்டும் போட்டியிட்டால், அவரை திடமாக எப்படி எதிர்க்க முடியும்,'' என கேள்வி எழுப்பினர்.
பதிலளிக்க திணறிய கனிமொழி, ''தலைமை யாரிடம் எப்படி இருக்கிறது என்பது குறித்தெல்லாம் யாரும் கவலைப்பட வேண்டாம். ''அனைவரிடமும் நட்பு பாராட்டுவதில் தவறில்லை; தேர்தல் என வந்து விட்டால், நம்மை எதிர்ப்போர் அனைவரும் எதிர்க்க வேண்டியவர்களே,'' என சமாளித்தார்.